ரியாத் விமான நிலைய தீவிபத்து: "முக்கியமான இடங்களையே" குறிவைத்தோம்: ஹவுதிக்கள் பரபரப்பு தகவல்

ராணுவ செய்தி தொடர்பாளர் யஹ்யா சரீ, டெலிகிராமில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
Fire Near Riyadh Airport
Published on

சவூதி தலைநகரில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாக குடியிருப்பாளர்கள் தெரிவித்த சில மணிநேரங்களுக்கு பிறகு, சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள "முக்கியமான இடங்களையும்", அந்நாட்டின் துறைமுக நகரமான யான்புவில் உள்ள எண்ணெய் கிடங்குகளையும் குறிவைத்து தாக்குதல்களை நடத்தியதாக ஏமனின் ஹவுதிகள் தெரிவித்தனர்.

"தலைநகர் சனாவை தாக்க சவுதி எதிரி மேற்கொண்ட குற்ற முயற்சிகளுக்கு பதிலடியாக... ஏமன் ஆயுத படைகள், பெருமளவிலான பாலிஸ்டிக் மற்றும் குரூயிஸ் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை பயன்படுத்தி இரண்டு வெற்றிகரமான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டன," என்று ஹவுதி ராணுவ செய்தி தொடர்பாளர் யஹ்யா சரீ, டெலிகிராமில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

பெரும் தீ விபத்து:

முதலாவது சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள முக்கிய இடங்களையும், இரண்டாவதாக யான்புவில் உள்ள அராம்கோ நிறுவனங்களையும் குறிவைத்தன.

ரியாத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள எரிபொருள் கிடங்கில், சவுதி எண்ணெய் நிறுவனமான அராம்கோவின் சின்னம் பொறிக்கப்பட்ட எரிபொருள் தொட்டியில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்ததை தொடர்ந்து ஹவுதிக்களின் அறிக்கை வெளியானதாக ஏ.எஃப்.பி. செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.

போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு முன்பு, ரியாத் கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் "பெரும் பிரச்சனைகள்" ஏற்பட்டதாக FlightRadar24 கண்காணிப்பு இணையதளம் தெரிவித்தது.

வான்வழி தாக்குதல் எச்சரிக்கை:

ஏமனின் ஹவுதிக்கள் மின்னல் வேக தாக்குதலை நடத்தி, பெரும் நிலப்பரப்புகளை கைப்பற்றியுள்ளதால், சவுதி அரேபியாவின் ஆதரவு பெற்ற, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கம் பதிலடி கொடுக்க திணறி வருகிறது.

நேற்று (சனிக்கிழமை) ஏற்பட்ட இந்த இடையூறு, சவுதி அதிகாரிகள் இரவில் விடுத்த வான்வழி தாக்குதல் எச்சரிக்கையை தொடர்ந்து நிகழ்ந்தது. இந்த மாதம் அண்டை நாடான ஏமனில் சண்டை தீவிரமடைந்த பின்னர் விடுக்கப்பட்ட முதல் எச்சரிக்கை இதுவாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com