

அமெரிக்காவில் ஒரு வாரத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் அப்துல் அல்-சயீத்தை ஜிஹாதி என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் 3 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், டிரம்ப் ஆதரவு பெற்ற குடியரசு கட்சி சார்பில் மைக் ரோஜர்ஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளர் அப்துல் அல் சயீத் போட்டியிடுகிறார்.
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்திற்கு முதல் செனட் வேட்பாளராக அப்துல் அல்-சயீத் என்ற இஸ்லாமியர் போட்டியிடும் நிலையில், அங்கு தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.
அமெரிக்காவில் பிறந்த அல் சயீத், ஒரு மருத்துவர் மற்றும் தொற்று நோயியல் நிபுணராக அறியப்படுகிறார். இவர் முன்னதாக சுகாதர இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் 2018 இல் மிச்சிகன் ஜனநாயக கட்சி ஆளுநர் வேட்பாளர் தேர்வில் போட்டியிட்டு தோல்வியடைந்து, பின்னர் 2026 இல் அக்கட்சியின் செனட் வேட்பாளர் பரிந்துரையை பெற்றார்.
இதற்கிடையில் அமெரிக்காவில் நடந்த ஒரு தேர்தல் பிரசார கூட்டத்தில், அல் சயீத் ஒரு ஜிஹாதி எனவும், அவரை செனட் சபைக்குள் உள்ளே அனுமதிப்பதற்கு முன்பு ஒரு உலோக கருவி மூலம் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.
அல் சயீத்துக்கு முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும், அவர் ஷரியா சட்டத்தை திணிக்க விரும்புவதாகவும் டிரம்ப் குற்றம்சாட்டினார்.
மேலும் 2001 செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதல்களோடும் அல் சயீத்தை ஒப்பிட்டு டிரம்ப் விமர்சனம் செய்தார்.
இந்த நிலையில் அமெரிக்கா சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடியை திசை திருப்பவதற்காக, தனது பெயரையும் தனது மதத்தையும் டிரம்ப் குறிப்பிட்டு வருவதாக அல் சயீத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அல் சயீத் கூறுகையில், “என் பெயரையும் என் நம்பிக்கையையும் சுட்டிக்காட்டுவதன் மூலம், உங்களால் எரிபொருளை வாங்க முடியவில்லை என்பதை மறைத்துவிடலாம் என்று நினைக்கிறீர்கள்.
நவம்பர் மாதத்திற்கு பிறகு என்னை செனட்டர் என்றே அழைக்க முடியும் என்பதால், என் முழு பெயர் அவருக்கு நினைவிருப்பதை பற்றி நான் கவலைப்படவில்லை. நான் உங்களுக்கு செனட்டர் முகமது தான்.
நாம் விரும்பியபடி பிரார்த்தனை செய்வதற்கான உரிமையை நம் அனைவருக்கும் உத்தரவாதம் அளிக்கும் நமது அரசியலமைப்பு சட்டத்தை குறித்து நான் பெருமிதம் கொள்கிறேன்” என்று அல் சயீத் கூறினார்.