

அமெரிக்காவில் இன்று நடைபெறும் இடைக்கால தேர்தல் வாக்குப் பதிவு அதிபர் டிரம்புக்கு அக்னி பரீட்சை ஆகும்.
அமெரிக்காவில் இன்று இடைக்கால தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இது அதிபர் டிரம்புக்கு அக்னி பரீட்சை ஆகும்.
இந்திய நேரப்படி இன்று மாலை 4:30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ளது.
அமெரிக்காவில் அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் என்றாலும் கீழ்சபையான காங்கிரஸின் (நாடாளுமன்றத்தின்) மக்கள் பிரதிநிதிகள் சபையின் ஆயுட்காலம் 2 ஆண்டுகள் மட்டுமே.
எனவே, அதிபர் பதவியேற்று 2 ஆண்டுகள் முடிவடையும் போது இடைக் காலத் தேர்தல் (Midterm Election) நடக்கிறது.
டிரம்ப் குடியரசு கட்சிக்கு காங்கிரஸில் (நாடாளுமன்றத்தில்) பெரும்பான்மை பலம் கிடைக்கிறதா அல்லது எதிர்க்கட்சிக்கு கிடைக்கிறதா என்பதை இந்தத் தேர்தல் தீர்மானிக்கும்.
அமெரிக்கவில் காங்கிரஸில் (நாடாளுமன்றத்தில்) உள்ள மக்கள் பிரதிநிதிகள் சபையின் (கீழ்சபையின்) மொத்தம் 435 இடங்களுக்கும், செனட் சபையில் (மேல் சபையில்) மூன்றில் ஒரு பங்கு, அதாவது 35 இடங்களுக்கும் தேர்தல் நடக்க உள்ளது.
இதுதவிர அமெரிக்காவின் 39 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்க உள்ளது.
அமெரிக்க காங்கிரஸில் (நாடாளுமன்றத்தில்) உள்ள இந்திய வம்சாவளி உறுப்பினர்கள் 'சமோசா காக்கஸ்' என்று அழைக்கப்படுகின்றனர்.
இந்த இடைக்கால தேர்தலில் மக்கள் பிரதிநிதிகள் சபையில் ஆறு இடங்களில் இந்திய வம்சாவளி ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஓஹியோ ஆளுநர் தேர்தலில் விவேக் ராமசாமி போட்டியிடுகிறார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் குடியரசுக் கட்சி தற்போது காங்கிரஸின்(நாடாளுமன்றத்தின்) இரு அவைகளிலும் பெரும்பான்மையைக் கொண்டுள்ளது.
ஆனால் இந்த இடைக்கால தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சி காங்கிரஸில் (நாடாளுமன்றத்தின்) இரு அவைகளில் ஏதேனும் ஒன்றில் பெரும்பான்மையை இழந்தால் கூட, டிரம்ப் தனது மீதமுள்ள 2 ஆண்டு பதவிக்காலத்தில் புதிய சட்டங்களை கொண்டு வருவதிலும், திட்டங்களுக்கு நிதி ஒப்புதல் பெறுவதிலும் பெரும் சவால்களை சந்திக்க நேரிடும்.
எனவே குடியரசு கட்சிக்கு எதிராக போட்டியிடும் ஜனநாயக கட்சி இத்தேர்தலில் தீவிரத்துடன் செயல்பட்டு வருகிறது.
கீழ்சபையான மக்கள் பிரதிநிதிகள் சபையில் 435 இடங்கள் உள்ளன. அதில் பெரும்பான்மையை குறைந்தபட்சம் 218 இடங்கள் தேவை. இந்த இடைக்காலத் தேர்தலில் 435 இடங்களுக்கும் போட்டி நடைபெற உள்ளது.
மேல் சபையான செனட் சபையில் 100 இடங்கள் உள்ளன. செனட் பெரும்பான்மைக்கு 51 இடங்கள் தேவை. தற்போது குடியரசுக் கட்சியினர் 53 இடங்களையும், ஜனநாயகக் கட்சியினர் 45 இடங்களையும் கொண்டுள்ளனர். இரண்டு சுயேச்சை செனட்டர்களும் ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்துள்ளதால் அதன் எண்ணிக்கை 47 ஆக உள்ளது.
செனட் சபை உறுப்பினர்கள் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். இந்த இடைக்கால தேர்தலில் 35 செனட் இடங்களுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறுவதும் ஜனநாயக கட்சியினருக்கு முக்கியமானதாகும். இதில் குறிப்பாக டெக்சாஸ், ஓஹாயோ, வட கரோலினா, மிச்சிகன் ஆகிய இடங்களுக்கான செனட் தேர்தல் முக்கியமானதாக கூறப்படுகிறது.
கடந்த 2024 ஜனவரியில் அதிபர் பதவியேற்ற டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். ஆனால் அவை அமெரிக்க மக்களுக்கு நேரடியாக அளித்த பயனை விட பாதகமே அதிகம் என்று கூறப்படுகிறது.
சமீபத்திய கருத்துக்கணிப்புகளின் படி டிரம்ப்புக்கு ஆதரவளிக்கும் மக்களின் எண்ணிக்கை 31% ஆக சரிந்துள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரியில் ஈரானுடனான போர் தொடங்கியதிலிருந்து, அமெரிக்காவில் டீசல் விலை 70% வரையிலும், பெட்ரோல் விலை 50% வரையிலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் குடியரசுக் கட்சியினருக்கு ஒரு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
அதே நேரம் பரம எதிரியான ரஷியாவிடமிருந்து 3 லட்சத்திற்கும் அதிகமான மெட்ரிக் டன் டீசலைக் கொள்முதல் செய்யும் முடிவு தொடர்பாகவும் டிரம்ப் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.
கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு பெயர்போன டிரம்ப், அமெரிக்க இனவாத சிந்தையுடையோர் ஆதரவை சம்பாதித்திருந்தாலும், குடியேறிகளுக்கு எதிராக அவரது அரசு இறக்கமற்று செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. குறிப்பாக சட்டவிரோத குடியேறிகளை கண்டறிய ஐசிஎப் துறை அதிகாரிகள் இரக்கமற்ற முறையில் மக்களிடம் நடந்துகொண்ட பல சம்பவங்கள் பதிவாகின. ஐசிஎப் மேற்கொள்ளும் திடீர் சோதனைகள் ஹிட்லரின் நாஜி சர்வாதிகார நாட்களை நினைவூட்டுவதாக கருத்துக்கள் வந்தன.
டிரம்ப் 2024 இல் அதிபர் பதவியேற்ற முதல் 18 மாதங்களில் இந்தியர்கள் உட்பட சுமார் 9.8 லட்சம் பேர் நாடு கடத்தப்பட்டனர். சட்டவிரோத குடியேற்றம் மட்டுமின்றி டிரம்ப் உடைய கொள்கைகள் சட்டபூர்வமாக அமெரிக்காவில் வாழும் மக்களுக்கும் பெரும் பாதிப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
அமெரிக்காவுக்கு படிக்க செல்லும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 50 சதவீதம் இவ்வாண்டு சரிந்துள்ளது. மேலும் அமெரிக்காவில் பணியாற்றுக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கும் விசா கட்டணங்கள், கட்டுப்பாடுகள் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு நாடுகளுக்கு வரிகளை தொடர்நது டிரம்ப் விதித்து வருகிறார். இது அமெரிக்காவுக்கு பயனளிக்கும் என டிரம்ப் வாதிட்டாலும், சுங்க வரிகளால் அமெரிக்காவில் கார்கள், மின்னணுப் பொருட்கள், ஆடைகள் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலைகள் 12% முதல் 18% வரை அதிகரித்துள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அதிகரித்த இறக்குமதி செலவுகள் குடும்ப செலவுகளை அதிகரித்துள்ளன. அதே நேரத்தில் பிற நாடுகள் விதித்த பதிலடித் வரிகள் அமெரிக்க விவசாயிகளை, குறிப்பாக சோயாபீன் மற்றும் மக்காச்சோள உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்களைப் பாதித்துள்ளன.
மேலும் கருக்கலைப்பு உரிமைகளுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் மற்றும் மருத்துவ செலவுகள் உயர்ந்துள்ளதும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.