

திபெத்தை ஒட்டிய நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில், போதே கோஷி ஆற்றில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95ஆக உயர்ந்துள்ளது.
வெள்ளத்தால் வீடுகள், சாலைகள், கட்டிடங்கள், தொலைத்தொடர்பு வலையமைப்புகள் உள்ளிட்ட பிற முக்கிய உள்கட்டமைப்புகள் கடும் சேதமடைந்துள்ளன. 95 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் காணாமல் போன சுமார் 400 பேரை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக, நேபாள ராணுவம் மற்றும் தனியார் நிறுவனங்களால் இயக்கப்படும் 30-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மீட்பு பணிகளில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டாலும் தொலைத்தொடர்பு வலையமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என நேபாள் வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கானல் தெரிவித்துள்ளார்.
நேபாள சுற்றுலா வாரியத் தகவலின் படி, 291 வெளிநாட்டினர் மற்றும் 93 நேபாள நாட்டினர் உட்பட 384 பயணிகள் காணாமல் போயுள்ளனர். இதில் 105 இந்தியர்கள் அடங்குவர். 57 தமிழர்கள் அடங்குவர். தமிழர்களில் 20 பேர் பாதுகாப்பாக இருப்பதாகவும், 37 பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பெய்ஜிங்கில் உள்ள தூதரகம், கேரள அரசு, தமிழ்நாடு அரசு, நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் என அனைத்து அரசுகளும் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்த வலியுறுத்தியுள்ளன, மேலும் உதவி எண்களை அறிவித்துள்ளன.
நேபாளத்தின் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவிடும் வகையில் போர்வைகள், மருந்துகள் என 10 டன் அத்தியாவசியப் பொருட்களை நேபாளத்திற்கு அனுப்புகிறது இந்தியா. நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் சி-130 ரக விமானம் இன்று இரவு ஹிண்டன் விமானப்படைத் தளத்திலிருந்து புறப்படவுள்ளது.
அதேவேளையில், கூடுதல் நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் சி-17 ரக விமானம் நாளை காலை நேபாளத்திற்குப் புறப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
நேபாளின் தலைநகரான காத்மாண்டுவில் இருந்து 100 கிலோ மீட்டருக்கு வடக்கே, திபெத்தின் எல்லை அருகே இன்று அதிகாலை 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பனிப்பாறைகள் விழுந்து இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நிலநடுக்கத்தால் நேபாளப் பகுதியில் உள்ள பனியாற்றிலிருந்து பனிப்பாறை சரிந்துள்ளது. இந்த பனிப்பாறைச் சரிவு அங்குள்ள லெண்டே ஆற்றில் விழுந்து, நீரோட்டத்தை தற்காலிகமாக ஒரு அணைப் போல தடுத்து நிறுத்தியுள்ளது.
பனிப்பாறைகளால் தேங்கி நின்ற நீர், அழுத்தம் தாங்காமல் ஒரே நேரத்தில் உடைந்ததால், திடீரென கீழ்நோக்கி நீர் பெருக்கெடுத்து பாய்ந்து இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அதாவது லெண்டே ஆற்றின் துணை ஆறான போதே கோஷி ஆற்றுப் பகுதியில் சரியாக இந்த வெள்ளப்பெருக்கு நிகழ்ந்துள்ளது. லெண்டே ஆற்றில் கடந்த 14 மாதங்களில் இரண்டு முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், திபெத்தில் நிலவிய கடும் வெப்பம் காரணமாக பனிப்பாறைகள் உடைந்து இதே பகுதிகளில் இதேபோன்ற திடீர் வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டன . இதில் ஒன்பது பேர் உயிரிழந்ததோடு, நேபாளத்தையும் சீனாவையும் இணைக்கும் பாலம் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகளும் சேதமடைந்தன.
வெப்பமடைந்து வரும் இமயமலைப் பகுதியால் ஏற்படும் அபாயங்களையும் காலநிலை ஆராய்ச்சி நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இந்தியா உட்பட பல நாடுகளை உள்ளடக்கிய இமயமலையின் பனிப்பிரதேசங்கள் மனிதனால் ஏற்படுத்தப்படும் காலநிலை மாற்றத்தால், உலகின் மற்ற பகுதிகளை விட வேகமாக வெப்பமடைந்து, உருகி வருகின்றன. இதனால் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்படும் அபாயங்களும் அதிகரித்து வருகின்றன.
அதிகரித்து வரும் உலகளாவிய வெப்பநிலை மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக, இந்து குஷ் இமயமலைப் பகுதி முழுவதும் உள்ள பனியாறுகள் அதிவேகமாக உருகி வருவதாகவும், 2000-ஆம் ஆண்டிலிருந்து பனி இழப்பு விகிதம் இருமடங்காகியுள்ளது என்றும் காத்மாண்டுவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக இமயமலை பகுதியில் நிலவிய அதிக வெப்பநிலை காரணமாக, பனிப்பாறைகள் வேகமாக உருகி தண்ணீராக மாறியுள்ளன. உருகிய நீர் பனிப்பாறைகளின் அடிப்பகுதிக்குச் சென்று, அதன் பிடிப்பை தளர்த்தி, ஒட்டுமொத்த பனிப்பாறையும் சரிந்து விழ வழிவகுத்ததாக கூறப்படுகிறது.
வெள்ளம் ஏற்படுவதற்குச் சற்று முன்பு திபெத் பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஏற்கனவே உருகி வலுவிழந்து நின்ற பனிப்பாறைகள், இந்த நிலநடுக்கத்தின் அதிர்வால் எளிதாக உடைந்து சரிந்து விழுந்துள்ளன.