பாகிஸ்தான் போலீசாரின் அலட்சியம்: 9 வயது ஆஸ்திரேலிய சிறுமி சுட்டுக்கொலை!

துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸ் அதிகாரி கொலைக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
9-Year-Old Australian Girl Shot Dead!
Published on

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சக்வால் பகுதிக்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த அதீல் அகமது என்பவர் தனது குடும்பத்துடன் விடுமுறையைக் கழிக்கச் சென்றிருந்தார். அண்மையில் ஹஜ் யாத்திரையை முடித்துவிட்டு உறவினர்களைக் காண அவர்கள் அங்கு வந்திருந்தனர்.

கடந்த புதன்கிழமை இரவு, அவர்கள் வாடகை காரில் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இரு ஆயுதமேந்திய கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் காரை வழிமறித்து அவர்களிடம் இருந்த நகைகளைப் பறித்துள்ளனர். அந்த நேரத்தில் அங்கு வந்த போலீஸ் அதிகாரிக்கும் கொள்ளையர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த பதற்றமான சூழலில், கொள்ளையர்களிடம் இருந்து தப்பிக்க அதீல் அகமது தனது காரை வேகமாக ஓட்டிச் செல்ல முயன்றுள்ளார். ஆனால், பஞ்சாப் காவல்துறையின் குற்றக் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரி, தப்பி ஓடுவது கொள்ளையர்கள்தான் எனத் தவறாகக் கணித்து, அந்த காரை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

போலீசாரின் இந்த அலட்சியமான துப்பாக்கிச் சூட்டில், கார் மீது குண்டுகள் பாய்ந்ததில் ஹனியா அகமது (9) என்ற சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள். சிறுமியின் தந்தை அதீல் அகமது மற்றும் அவரது 11 வயது சகோதரன் ஆஃபான் ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக சிறுமியின் தாய் டாக்டர் சித்ரா கான் காயமின்றி உயிர் தப்பினார்.

இந்த விவகாரம் ஆஸ்திரேலியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்துப் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், "விடுமுறைக்காக பாகிஸ்தான் சென்ற ஒரு சிறுமியின் உயிர் பறிபோயிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இச்சம்பவம் குறித்து பாகிஸ்தான் அரசு வெளிப்படையான மற்றும் முறையான விசாரணை நடத்த வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸ் அதிகாரி உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு, கொலைக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட அந்த இரு கொள்ளையர்களும் காவல்துறையினரால் மற்றொரு மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு விதிகளையும் நெறிமுறைகளையும் மீறிச் செயல்பட்ட போலீசாரின் இந்த அலட்சியப் போக்கு, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளிலும் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com