

வடக்கு கென்யாவின் தொலைதூர பகுதி ஒன்றில் சஃபாரி ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், ஐந்து அமெரிக்கர்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்ததாக உள்ளூர் காவல்துறை மற்றும் அமெரிக்க வெளியுறவு துறை தெரிவித்துள்ளன.
சம்புரு மாவட்டத்தில் உள்ள லோய்சாபா வனப்பாதுகாப்புப் பகுதியில் இருந்து இவாசோ நைரோ பகுதிக்கு சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர், விபத்துக்குள்ளானதாக கென்யா சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்த ஆணையம் அறிக்கையில் கூறியுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஆறு பயணிகள் மற்றும் விமானி என மொத்தம் ஏழு பேர் பயணம் செய்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
நேற்று (புதன்கிழமை) இரவு, சம்புருவின் காவல்துறை தலைவர் டேவிட் என்கோரோய், ஹெலிகாப்டரில் இருந்த ஏழு பேரும் உயிரிழந்துவிட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். வாஷிங்டனில், உயிரிழந்தவர்களில் ஐந்து பேர் அமெரிக்கர்கள் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை, ஆனால் உயிரிழந்தவர்களில் ஒருவர், என்.பி.சி. யுனிவர்சலுக்கு சொந்தமான, அமெரிக்காவை தளமாக கொண்ட ஸ்பானிஷ் மொழி தொலைக்காட்சியான டெலிமுண்டோ நிலையங்களின் தலைவராகவும் பொது மேலாளராகவும் இருந்த 55 வயதான ஜோஸ் சுவாரெஸ் என்று புளோரிடாவின் மியாமியில் உள்ள ஒரு உள்ளூர் தொலைக்காட்சி நிலையம் தெரிவித்துள்ளது.
"கென்யாவில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஜோஸ் உயிரிழந்தார் என்ற துயர செய்தியை கேட்டு நாங்கள் மிகுந்த துயரமடைந்தோம்," என்று மியாமியில் உள்ள என்.பி.சி. துணை நிறுவனம், என்.பி.சி. யுனிவர்சல் மற்றும் டெலிமுண்டோ தலைமைகளின் கூட்டறிக்கையில் இருந்து மேற்கோள் காட்டியுள்ளது.
உள்ளூர் சஃபாரி நிறுவனமான ட்ராபிக் ஏர் கென்யா, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காகத் தனது இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்பியதாக ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த விமானம் யூரோகாப்டர் EC130 B4 வகையை சேர்ந்தது என்று விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
"மீட்புக் குழுக்கள் விபத்து நடந்த இடத்தை அடையப் பணியாற்றி வரும் நிலையில், எங்களின் அவசரகால மீட்புக் குழுக்கள் பல்துறை முகமைகளின் ஒருங்கிணைந்த மீட்பு பணியில் பங்கேற்று வருகின்றன," என்று கென்யா செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
கென்யாவில் ஹெலிகாப்டர் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. ஒலோலோக்வே மலை போன்ற தொலைதூர இடங்களுக்கு பார்வையாளர்களை ஏற்றி செல்ல உள்நாட்டு விமானங்களையே சார்ந்திருக்கும் ஒரு சுற்றுலா துறை உள்ளது.
கடந்த பிப்ரவரியில், மேற்கு கென்யாவின் மலைப்பாங்கான பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஆறு பேரில் ஒரு சட்டமன்ற உறுப்பினரும் அடங்குவார்.