29 வீரர்கள், 100 கி.மீ தூரம், ஒரே ஒரு பிரம்மாண்ட ஜாகுவார்: கின்னஸ் சாதனை படைத்தது ஜாகுவார் டிசிஎஸ் ரேசிங் அணி!

தற்போது ஃபார்முலா ஈ அணிகளுக்கான உலக சாம்பியன்ஷிப் தரவரிசையில் ஜாகுவார் டிசிஎஸ் ரேசிங் அணி போர்ச்சே அணியை விட 14 புள்ளிகள் முன்னிலையில் உள்ளது.
Jaguar TCS
Published on

ஃபார்முலா ஈ கார் பந்தயத் தொடரின் GEN3 சகாப்தம் முடிவடைவதை முன்னிட்டு, லண்டன் வீதிகளில் 100 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் ஓடி, ஜாகுவார் ஐ-டைப் 7 ரேஸ் காரின் பிரம்மாண்ட வடிவத்தை ஜிபிஎஸ் வரைபடமாக உருவாக்கி ஜாகுவார் டிசிஎஸ் ரேசிங் அணி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.

சாதனை

வரும் ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள லண்டன் ஈ-ப்ரீ தொடருடன் ஃபார்முலா ஈ கார பந்தயத்தின் GEN3 சகாப்தம் நிறைவடைகிறது. இதனைச் சிறப்பிக்கும் வகையில், ஜாகுவார் டிசிஎஸ் ரேசிங் அணி மற்றும் அதன் முக்கிய தொழில்நுட்பப் பங்காளியான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் அமைப்பைச் சேர்ந்த 29 ஓட்டப் பந்தய வீரர்கள் இந்த கின்னஸ் முயற்சியில் ஈடுபட்டனர்.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் லண்டன் தலைமையகத்தில் தொடங்கிய இந்த ஓட்டம், லண்டனின் முக்கிய வீதிகள் வழியாக 100 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தைக் கடந்து மீண்டும் அதே இடத்தில் நிறைவடைந்தது. ஒவ்வொரு வீரரும் தங்களது ஜிபிஎஸ் சாதனையைத் தொடரோட்டப் பேடன் போல அடுத்த வீரரிடம் வழங்கி, தடையற்ற தொடர்ச்சியான பாதையைப் பதிவு செய்தனர். துல்லியமான வரைபடம், தடையற்ற பாதை அமைப்பு மற்றும் ஜிபிஎஸ் பதிவுகள் போன்ற கின்னஸ் அமைப்பின் அனைத்து விதிகளையும் பூர்த்தி செய்து இந்த சாதனை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

GEN3 சகாப்தத்தின் நாயகன்

கடந்த நான்கு சீசன்களாக நடைபெற்ற GEN3 சகாப்தத்தில், ஜாகுவார் டிசிஎஸ் ரேசிங் அணி 18 பந்தயங்களில் வெற்றி பெற்று மிக வெற்றிகரமான அணியாகத் திகழ்கிறது. மேலும், 23 முறை போடியம் இடங்களையும், மொத்தம் 1,144 புள்ளிகளையும் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இது தவிர, லண்டன் எக்செல் மெய்நிகர் ரேஸ் களத்தில் 109 நபர்கள் பங்கேற்ற சிமுலேட்டர் வீடியோகேம் ரிலே தொடரிலும் பங்கேற்று, ஒரே வாரத்தில் இரண்டாவது கின்னஸ் சாதனையையும் இந்த அணி தன்வசப்படுத்தியுள்ளது.

சாம்பியன்ஷிப் ரேஸில் ஜாகுவார்

தற்போது ஃபார்முலா ஈ அணிகளுக்கான உலக சாம்பியன்ஷிப் தரவரிசையில் ஜாகுவார் டிசிஎஸ் ரேசிங் அணி போர்ச்சே அணியை விட 14 புள்ளிகள் முன்னிலையில் உள்ளது. ஓட்டுநர்களுக்கான தரவரிசையில் ஜாகுவார் அணியின் மிட்ச் எவன்ஸ் இரண்டாம் இடத்தில் உள்ளார். 10 ஆண்டுகள் ஜாகுவார் அணியுடன் பயணித்த மிட்ச் எவன்ஸுக்கு இந்த லண்டன் ஈ-ப்ரீ போட்டி இறுதிப் போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com