

அடோபில் முன்னாள் மென்பொருள் தரப் பொறியாளராக 25 ஆண்டுகள் பணியாற்றிய ஒருவர், வேறு தொழில்நுட்ப பணியை கண்டுபிடிக்க முடியாத காரணத்தால், பள்ளி பேருந்து ஓட்டுநர் வேலையை தேர்ந்தெடுத்துள்ளார்.
அமெரிக்காவில் கொலராடோ மாகாணத்தை சேர்ந்த ஜேம்ஸ் ஸ்ட்ரான், ஆகஸ்ட் 2025-ல் அடோப் டிஜிட்டல் வீடியோவில் மூத்த மென்பொருள் தரப் பொறியாளர் பதவியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். அன்று முதல், அவர் நீண்ட நாட்களாக வேறு வேலையை தேடி வந்தார்.
ஆனால் ஒரு வருடத்திற்கும் மேலாகியும் வேலை கிடைக்காத காரணத்தால், அவர் முற்றிலும் மாறுபட்ட பாதையை தேர்ந்தெடுக்க முடிவு செய்தார். இதையடுத்து அவர் தனது மாவட்டத்தில் உள்ள பள்ளியில் பேருந்து ஓட்டுநர் வேலைக்கு முயற்சி செய்து, அதனை தேர்ந்தெடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் லிங்க்ட்இன் தளத்தில் ஒரு பதிவில், “ஒரு வருடத்திற்கும் மேலாக நீண்ட, கடினமான வேலை தேடிய பிறகு, உயர் தொழில்நுட்ப துறையால் மனமுடைந்து, பாகுபாட்டிற்கு உள்ளானேன்.
இந்த நிலையில், எனது அடுத்த அத்தியாயம் தொடங்கியுள்ளது என்பதை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்று அவர் எழுதியிருந்தார்.
மேலும் தனது முந்தைய தொழில்நுட்ப பணியை விட இந்த புதிய வேலையில் சம்பளம் கணிசமாக குறைவாக இருந்தாலும், இந்த மாற்றத்தை ஆவலுடன் எதிர்நோக்குவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பணி தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும், தனது புதிய சக ஊழியர்கள் அக்கறையோடும், அன்போடும், இயல்போடும் இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், “என் முந்தைய நிறுவனத்தில் என்னை புறக்கணித்து, என்னை தாழ்த்தி, இறுதியில் வேலையை விட்டு நீக்கியவர்களுக்கும் நன்றி. ஆனால், நீங்கள் எனக்கு ஒரு சிறந்த எதிர்காலத்திற்கான வழியை காட்டியதால் மட்டுமே இந்த நன்றி.
உங்களைப் போன்றவர்களால் தான், நான் ஒரு கணினிக்கு பதிலாக 40 அடி பேருந்தை ஓட்டப் போகிறேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மேலும், என் விண்ணப்பங்களைக் கண்மூடித்தனமாக நிராகரித்து, நேர்முக தேர்வுக்கு பதிலளிக்காமல் தவிர்த்தவர்களும், நேர்காணல்களுக்கு கூட வராமல் இருந்த முதலாளிகளும், இனியாவது வேலை தேடி வருபவர்களை நல்ல முறையில் நடத்துவார்கள் என்று நம்புகிறேன்,” என்று அவர் பதிவிட்டார்.
பொறியாளரின் இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். ஒருவர் அந்த பதிவுக்கு, “அடோபில் நீங்கள் செய்த வேலையை போலவே பேருந்து ஓட்டுவதும் முக்கியமானது தான்.
நீங்கள் அதை ஆர்வத்துடன் செய்யும் வரை, நீங்கள் எதிர்பாராத விதத்தில் ஒருவரிடம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். பெருநிறுவன உலகம் சிறந்த மனிதர்களை இழந்து வருகிறது, இதை நாம் வரும் தலைமுறைகளிலும் காண்போம்” என்று பதிவிட்டார்.
மற்றொரு நபர், “பள்ளி வாகனங்களில் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருப்பது ஒரு உன்னதமான கடமையாகும். நீங்களும் உங்களுக்காக கூடுதல் வழிகளை கண்டறிவீர்கள் என்று நம்புகிறேன்.
இந்த வாழ்க்கையில் நமக்கு இருப்பது ஒரே ஒரு உடல்தான், ஆனால் நாம் செய்யும் வேலைகள் எல்லாமே நமது நேரத்தையும் சக்தியையும் வேறு இடங்களில் செலவிட வேண்டும் என்று நிர்பந்திக்கிறது.
பணம் என்பது குறுகிய வடிவம் தான், ஆனால் நீங்கள் வாழ்வதற்கு தேவையானவை உங்களிடம் நிச்சயமாக இருக்கும்” என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.