22 இந்திய மாலுமிகள் மீட்பு.. ஹார்முஸ் அருகே வர்த்தக கப்பல்கள் மீது தொடரும் தாக்குதல்களுக்கு இந்தியா கண்டனம்

டால்பின் கப்பலில் இருந்த 11 இந்திய மாலுமிகளில் 9 பேர் மீட்கப்பட்டுள்ளனர், ஆனால் இருவர் இன்னும் காணவில்லை.
வர்த்தக கப்பல்கள் மீது தொடரும் தாக்குதல்
Published on: 
Summary

ஹார்முஸ் ஜலசந்தி 2 வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களை இந்தியா வன்மையாகக் கண்டித்துள்ளது.

ஈரான் - அமெரிக்கா போருக்கு இடையில் ஹார்முஸ் ஜலசந்தி அருகே வர்த்தகக் கப்பல்கள் மீது தொடரும் தாக்குதல்களுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

நேற்று (அக்டோபர் 11) எம்.டி. பெட்ரோ டால்பின் மற்றும் எம்.டி. வல்தேரா ஆகிய இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் சிக்கிய 22 இந்திய மாலுமிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல்

இந்தக் கப்பல்களில் ஒன்று டிரோன் மூலமாகவும், மற்றொன்று அடையாளம் தெரியாத ஆயுதம் மூலமாகவும் தாக்கப்பட்டு தீ விபத்து ஏற்பட்டது.

பெட்ரோ டால்பின் கப்பலில் இருந்த 11 இந்திய மாலுமிகளில் 9 பேர் மீட்கப்பட்டுள்ளனர், ஆனால் இருவர் இன்னும் காணவில்லை.

மறுபுறம் மார்ஷல் தீவுகள் கொடியை ஏந்திய வல்தேரா கப்பலில் இருந்த 11 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா கவலை

வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இரண்டு வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ளது.

ஓமனின் தலைநகரான மஸ்கட்டில் உள்ள இந்தியத் தூதரகம், நிலவரங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தூதரகம், சம்பந்தப்பட்ட ஓமன் அதிகாரிகளுடனும், இரு கப்பல்களையும் நிர்வகிக்கும் நிறுவனங்களுடனும் தொடர்ச்சியான தொடர்பில் உள்ளது.

மேலும் "ஹார்முஸ் பகுதியில் வர்த்தகக் கப்பல்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்கள் மிகுந்த கவலையளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

அவை ஏற்கனவே பதற்றமான சூழ்நிலையை மேலும் அதிகரிக்க அச்சுறுத்துகின்றன. கடலில் நிகழும் இதுபோன்ற சம்பவங்கள், கப்பல்கள் மற்றும் அதில் உள்ள மாலுமிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பது மட்டுமல்லாமல், சர்வதேச கடல்வழி வர்த்தகத்தையும் பாதிக்கக்கூடும்.

இப்பகுதியில் தொடரும் மோதலை கூடிய விரைவில் தணித்து, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் மூலம் சர்ச்சைகளைத் தீர்க்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளது.

அக்டோபர் 9 சம்பவம்

முன்னதாக, அக்டோபர் 9 ஆம் தேதி, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா துறைமுகத்தில், பனாமா கொடியை ஏந்திய எம்டி ஜெம் எண் 2 என்ற கச்சா எண்ணெய் கப்பல் ஆளில்லா விமானம் மூலம் தாக்கப்பட்டது. அந்தக் கப்பலில் 22 இந்தியர்கள் இருந்தனர்.

கப்பலில் இருந்த 22 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதாக மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் அப்போது தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com