

உலகெங்கிலும் உள்ள புகைப்படக் கலைஞர்கள் மற்றும் கலை ஆர்வலர்களால் இன்று (ஆகஸ்ட் 19) உலக புகைப்பட தினம் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஒரு காலக்கட்டத்தில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே சாத்தியமாக இருந்த புகைப்படத் கலை, இன்று அனைவரின் கைகளிலும் உள்ள ஸ்மார்ட்போன்கள் மூலம் அன்றாட வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாக மாறியுள்ளது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் உலக புகைப்பட தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க பின்னணியோடும் புதிய கருப்பொருளோடும் உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்த ஆண்டிற்கான சர்வதேச புகைப்பட தினத்தின் அதிகாரப்பூர்வ கருப்பொருளாக "HOME" தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இங்கு வீடு என்பது வெறும் நான்கு சுவர்களால் சூழப்பட்ட கட்டிடத்தை மட்டும் குறிக்கவில்லை. மனிதர்களின் உணர்வுகள், நினைவுகள், கலாச்சார வேர்கள் மற்றும் அவர்களுக்கு அமைதியையும் பாதுகாப்பையும் தரும் சூழலை மையமாகக் கொண்டே இந்தத் தலைப்பு வரையறுக்கப்பட்டுள்ளது.
ஒரு புகைப்படக் கலைஞர் தனது அன்றாட வாழ்க்கைச் சூழல், குடும்ப உறுப்பினர்களின் இயல்பான தருணங்கள், சொந்த ஊரின் நினைவுகள் அல்லது தனக்கு விருப்பமான மனிதர்களையும் இடங்களையும் எவ்வாறு பார்க்கிறார் என்பதை உணர்வுபூர்வமாகப் படம்பிடிக்க உலக புகைப்பட அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. தொழில்முறைத் தொழில்நுட்ப நேர்த்தியை விட, படங்களின் வழியே வெளிப்படும் மனித உணர்வுகளுக்கே இந்த ஆண்டு முதன்மை இடம் அளிக்கப்படுகிறது.
இதனுடன் இணைந்து, பிரான்ஸ் நாட்டின் பண்பாட்டு அமைச்சகம் புகைப்படக் கலையின் 200 ஆம் ஆண்டு நிறைவு விழாவை 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் கொண்டாடுவதால் இந்த ஆண்டின் நிகழ்வு கூடுதல் வரலாற்று முக்கியத்துவத்தைப் பெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலக புகைப்பட தினமாகக் கொண்டாடப்படுவதற்குப் பின்னால் ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வு உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜோசப் நிசிஃபோர் நியெப்ஸ் என்பவரால் உலகின் முதல் நிலையான புகைப்படம் உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து லூயிஸ் டேகியூர் என்பவர் "டேகியூரோடைப்" என்ற புதிய மற்றும் தெளிவான புகைப்பட உருவாக்கும் முறையைக் கண்டறிந்தார்.
பிரான்ஸ் நாட்டின் அறிவியல் அகாடமி இந்தத் தொழில்நுட்பத்தின் காப்புரிமையை வாங்கி, 1839 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 அன்று "உலகிற்கு பிரான்ஸ் வழங்கும் இலவசக் கொடை" என்று எந்தக் காப்புரிமைப் புகார்களும் இன்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவைக் கவுரவிக்கும் விதமாகவே ஆகஸ்ட் 19 புகைப்பட தினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
நவீன டிஜிட்டல் காலத்தில் புகைப்படக் கலையின் எல்லைகள் வெகுவாக விரிவடைந்துள்ளன. வரலாற்றை ஆவணப்படுத்துவதிலும், உலகளாவிய சமூக மாற்றங்களை வெளிக்கொணர்வதிலும், மனிதர்களின் அரிய தருணங்களை எதிர்காலத்திற்காகச் சேமித்து வைப்பதிலும் புகைப்படம் ஒரு சக்திவாய்ந்த ஊடகமாகத் திகழ்கிறது.
ஸ்மார்ட்போன்களின் வருகையால் இன்று உலகெங்கிலும் நாள்தோறும் கோடிக்கணக்கான புகைப்படங்கள் எடுக்கப்பட்டுப் பகிரப்பட்டு வருகின்றன. 2026 ஆம் ஆண்டின் "இல்லம்" என்ற கருப்பொருள், வேகமான இந்த நவீன உலகில் நம்மை மீண்டும் நமது வேர்களுடனும் அன்பான மனிதர்களுடனும் பிணைக்கும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.