

அமெரிக்க நீதித்துறையின் சட்ட அமலாக்க அமைப்புகளில் இருந்த முக்கிய குறைபாட்டை கண்டறிந்ததற்காக, இந்திய வம்சாவளியை சேர்ந்த 19 வயதான இளைஞரின் பெயர் அமெரிக்க நீதித் துறையின் இணை பாதுகாப்பு பட்டியலில் (Hall of fame) இடம்பெற்றுள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த 19 வயதான நிசர்கா அதிகாரி என்பவர் 2023-ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள விண்வெளி சங்கத்தில் வெப் டெவலப்பராக தனது பயிற்சியை தொடங்கினார்.
பின்னர் அவர் ஓப்பன் சோர்ஸ் ஹேக் கிளப்பின் திட்டங்களில் பணியாற்றி கொண்டு, தனது சொந்த ஹேக் கிளப் ஒன்றையும் நிறுவினார்.
இதையடுத்து 2024-இல் ஸ்கேன் நிறுவனத்தில் முழுநேர நிறுவன பொறியாளராக பணியில் சேர்ந்தார்.
இதைத்தொடர்ந்து பல இடங்களில் பணிபுரிந்து அனுபவம் பெற்ற இவர், இந்தியாவில் சிபிஎஸ்இ இணையவழி மதிப்பெண் ஆன்லைன் தளத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்து சுட்டிக்காட்டினார்.
இதன்காரணமாக ஐஐடி கான்பூரில் உள்ள C3iHub நிறுவனத்தில் புலனாய்வு பொறியாளராக பணி அமர்த்தப்பட்டார்.
ஐஐடி கான்பூர் இயக்குநர் அகர்வால், இளைஞருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அவர் இளம் வயதில் வெளிப்படுத்திய தொழில்நுட்ப திறமைகளையும் பாராட்டினார்.
இந்த நிலையில் 19 வயதான நிசர்கா அதிகாரி, தற்போது அமெரிக்க நீதித்துறையின் (Department of Justice) சட்ட அமலாக்க அமைப்பு ஒன்றில் உள்ள முக்கிய குறைபாடுகளை கண்டறிந்து சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த குறைபாடுகளை கண்டறிந்த நீதித்துறை, சுமார் ஒரு வாரத்திற்குள் அதனை சரிசெய்து, இளைஞரை நீதித்துறையின் இணைய பாதுகாப்பு புகழ்பட்டியல் மற்றும் நன்றியுரை பக்கத்தில் அங்கீகரித்துள்ளது.
இந்த அங்கீகரிப்பை 19 வயதான நிசர்கா அதிகாரி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு இந்த குறைபாடு குறித்து புகார் அளித்தேன்.
அவர்கள் அதை ஒரு வாரத்திற்குள் சரிபார்த்து, எனது பெயரை நன்றியுரை பக்கத்தில் சேர்த்து அங்கீகாரம் அளித்துள்ளனர்” என்று கூறினார்.