சாக்கடை கால்வாய் தோண்டிய 18 வயது மாணவருக்கு கிடைத்த ரூ.85.90 கோடி தங்கப் புதையல்!

தங்க கட்டிகள் அனைத்தும் பிரஸ்ஸல்ஸில் உள்ள அதீத பாதுகாப்பு நிறைந்த அரசு கருவூலத்திற்கு மாற்றப்பட்டன.
Gold Treasure
Published on

பெல்ஜியம் நாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை நேரத்தில், சாக்கடை கால்வாய் அமைப்பதற்காக குழி தோண்டிய 18 வயது மாணவருக்கு சுமார் 9 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.85.90 கோடி) மதிப்புள்ள மிகப்பெரிய தங்கப் புதையல் கிடைத்துள்ளது.

1 யூரோ நாணயம் என நினைத்த மாணவர்

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகருக்கு வடமேற்கே 30 கி.மீ தொலைவில் உள்ள 'சின்ட்-கில்லிஸ்-டெண்டர்மாண்டே' என்ற பகுதியில் ஒரு கட்டுமானப் பணி நடந்து வந்தது.

அங்கு 'கோபி' என்ற 18 வயது மாணவர் தனது சக ஊழியர்களுடன் சேர்ந்து சாக்கடைத் திட்டத்திற்காக குழி தோண்டிக் கொண்டிருந்தார்.

இதுகுறித்து மாணவர் கோபி பேசுகையில், "நாங்கள் தோண்டிக் கொண்டிருக்கும் போது திடீரென ஏதோ பளபளப்பாகக் கிடப்பதைப் பார்த்தோம். முதலில் அது சாதாரண 1 யூரோ நாணயங்கள் என்றுதான் நினைத்தோம்.

ஆனால் தொடர்ந்து தோண்டிய போது, பெரிய தங்கக் கட்டிகள் வெளியே வந்தன. நாங்கள் நினைத்ததை விட அது மிகப்பெரிய புதையலாக இருந்தது" என்றார்.

சுவருக்குள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த தங்கம்

அங்கு கண்டெடுக்கப்பட்ட பையில் தங்க நாணயங்கள், தங்கக் கட்டிகள் மற்றும் வரிசை எண்கள் குறிக்கப்பட்ட நவரத்தின தங்கப் பாளங்கள் இருந்தன.

அந்த இடம் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த பிரபல மதுபான ஆலை அதிபரான 'தியோபிலஸ் வான் அஸ்ஸே' என்பவருக்குச் சொந்தமான பிரம்மாண்ட பங்களா ஆகும்.

அங்குள்ள அடித்தளத்தின் செங்கல் சுவருக்குள், யாரும் கண்டுபிடிக்க முடியாதபடி இந்தத் தங்கப் பை ரகசியமாக மறைத்து வைத்துப் பூசப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேர்மையுடன் போலீசில் ஒப்படைப்பு

இவ்வளவு பெரிய புதையலைக் கண்டதும் மாணவர் கோபியும் அவரது சக ஊழியர்களும் உடனடியாக காவல்துறைக்கும், கட்டுமான நிறுவனத்திற்கும் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் தங்கத்தைக் கைப்பற்றி, பிரஸ்ஸல்ஸில் உள்ள அதீத பாதுகாப்பு நிறைந்த அரசு கருவூலத்திற்கு மாற்றினர்.

இதுகுறித்து கோபி கூறுகையில், "சில நாணயங்கள் மட்டும் கிடைத்திருந்தால் நாங்கள் யாரிடமும் சொல்லாமல் இருந்திருப்போம்.

ஆனால், இது இவ்வளவு பெரிய புதையலாக இருந்ததால் உடனடியாக அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். எங்களுக்கு அரசு தரப்பில் இருந்து நல்ல சன்மானம் கிடைக்கும் என நம்புகிறோம்" என்றார்.

புதையல் யாருக்குச் சொந்தம்?

தற்போது இந்தத் தங்கப் புதையல் யாருக்குச் சொந்தம் என்ற போராட்டம் தொடங்கியுள்ளது. பெல்ஜியம் நாட்டுச் சட்டப்படி, புதையல் கண்டெடுக்கப்பட்டால் அதன் உண்மையான உரிமையாளர்கள் யாராவது உரிமை கோரி வருகிறார்களா என்று குறைந்தது 5 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.

அந்த பங்களாவின் பழைய உரிமையாளரான வான் அஸ்ஸே குடும்பத்தின் வாரிசுகள், கட்டுமான நிறுவனம், தற்போதைய நில உரிமையாளர் மற்றும் புதையலைக் கண்டுபிடித்த மாணவர் கோபி ஆகியோரிடையே இந்த ரூ.85.90 கோடியைப் பிரித்துக் கொள்வதில் சட்ட ரீதியான சிக்கல்கள் எழ வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், இந்தத் தங்கம் ஏதேனும் குற்றச் செயல்களோடு தொடர்புடையதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com