2 கோடி கேலன் தண்ணீரைச் சேமித்து உலக சாதனை: ‘இளம் எக்கோ-ஹீரோ’ விருது பெற்ற 13 வயது சிறுமி நேஹா!

"வாட்டர் சேவர்" செயலி மூலம் நேஹா உலகளவில் தண்ணீர் புரட்சியை ஏற்படுத்துகிறார்.
Neha Blunt
Published on
Summary

அறிவியல் தொழில்நுட்பத்தையும், சமூக விழிப்புணர்வையும் கையில் எடுத்து, உலகளவில் மிக முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் ஒன்றான தண்ணீர் பற்றாக்குறைக்குத் தீர்வு கண்டுள்ளார் நேஹா பிளண்ட் என்ற 13 வயது சிறுமி.

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தைச் சேர்ந்த இவர் உருவாக்கிய 'வாட்டர் சேவர்' என்ற இணைய செயலி மூலம், இன்று உலகம் முழுவதும் சுமார் 2 கோடி கேலன் தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது.

இவரது இந்த அசாத்திய முயற்சியைப் பாராட்டி, சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பான 'ஆக்ஷன் ஃபார் நேச்சர்' , இவருக்கு 2026-ம் ஆண்டிற்கான சர்வதேச இளம் எக்கோ-ஹீரோ விருதை வழங்கி கௌரவித்துள்ளது.

தண்ணீர் சேமிப்பை விளையாட்டாக மாற்றிய 'கோடிங்' நுட்பம்

சாதாரண விழிப்புணர்வு பிரசாரங்கள் மக்களை முழுமையாகச் சென்றடைவதில்லை என்பதை நேஹா கவனித்தார்.

மக்கள் தங்களுக்குத் தெரியாமலேயே அன்றாட வாழ்வில் தண்ணீரை வீணாக்குவதை மாற்ற தொழில்நுட்ப ரீதியாக தீர்வு காண முயன்றார்.

ஒரு பெரிய அரசு அமைப்போ அல்லது பெருநிறுவனமோ செய்ய வேண்டிய காரியத்தை, இந்த 13 வயது சிறுமி சாதித்துள்ளார்.

இதற்காக சுமார் 7 மாதங்கள் கடினமாக உழைத்து, சுயமாக கோடிங் கற்றுக்கொண்டு இந்த 'வாட்டர் சேவர்' செயலியை நேஹா வடிவமைத்தார். இந்த செயலி மக்களுக்கு வெறும் அறிவுரைகளை வழங்காமல், அன்றாட தண்ணீர் பயன்பாட்டை ஒரு சவாலாக மாற்றுகிறது.

பயனர்கள் தங்கள் வீடுகளில் தினமும் எவ்வளவு தண்ணீர் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பதிவு செய்து, அதை எப்படிக் குறைக்கலாம் என்பதற்கான இலக்குகளை இதில் நிர்ணயித்துக் கொள்ளலாம்.

10 லட்சம் மக்களைச் சென்றடைந்த உலகளாவிய இயக்கம்

2023 ஆம் ஆண்டின் வசந்த காலத்தில், இந்த திட்டத்தை பள்ளிகள் மற்றும் சமூக அமைப்புகளுடன் இணைத்து ஒரு பெரிய மக்கள் இயக்கமாக நேஹா மாற்றினார்.

கடினமான சுற்றுச்சூழல் வார்த்தைகளைப் பயன்படுத்தாமல், அன்றாட வாழ்வில் செய்யக்கூடிய எளிய மாற்றங்களை இந்த இயக்கம் வலியுறுத்தியது.

இந்த எளிய அணுகுமுறைக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக, உலகம் முழுவதும் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்களிடம் தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு சென்று சேர்ந்துள்ளது.

மேலும், சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் தங்களது அன்றாட தண்ணீர் பயன்படுத்தும் பழக்கத்தை மாற்றி, தண்ணீரைச் சேமிக்கத் தொடங்கியுள்ளனர்.

சிறு துளி... பெரு வெள்ளம்!

இந்த இயக்கம் மூலம் சேமிக்கப்பட்ட 2 கோடி கேலன் தண்ணீர் என்பது, ஏதோ ஒரு பெரிய உள்கட்டமைப்பு திட்டத்தினால் நடந்தது அல்ல. சாதாரண மக்கள் தங்கள் வீடுகளில் செய்த சின்னச் சின்ன மாற்றங்களால் சாத்தியமானது.

குளிக்கும் நேரத்தைக் குறைப்பது. பல் துலக்கும் போது குழாய்களை மூடி வைப்பது. வீடுகளில் உள்ள குழாய் கசிவுகளை உடனுக்குடன் சரி செய்வது. துணி துவைக்கும் இயந்திரங்களை முழு கொள்ளளவில் மட்டுமே பயன்படுத்துவது.

உலகளாவிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு முன்னால், தனிமனிதனாக நாம் செய்யும் சிறு மாற்றங்கள் என்ன பயனைத் தந்துவிடப் போகிறது என்று நினைப்பவர்களுக்கு, 2 கோடி கேலன் தண்ணீர் சேமிப்பு என்ற புள்ளிவிவரமே ஆகச்சிறந்த பதிலாகும்.

சர்வதேச அங்கீகாரமும் இளைஞர்களுக்கான உந்துதலும்

சர்வதேச அளவில் 3-வது இடத்தைப் பிடித்து நேஹா பெற்றுள்ள இந்த 'இளம் எக்கோ-ஹீரோ' விருது, இன்றைய இளைஞர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வெறும் களப்பணிகளில் மட்டும் ஈடுபடாமல், மென்பொருள் எழுதுவது, தரவுகளை பகுப்பாய்வு செய்வது எனப் பொதுமக்களின் பழக்கவழக்கங்களையே மாற்றும் அளவிற்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளனர் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது.

இந்தத் திட்டம், சுற்றுச்சூழல் மீது ஆர்வம் கொண்ட பிற இளைஞர்களுக்கும் ஒரு புதிய பாதையைக் காட்டியுள்ளது. கணினி ஆர்வம் உள்ளவர்கள் மென்பொருள்களையும், கலை ஆர்வம் உள்ளவர்கள் விழிப்புணர்வு ஓவியங்களையும் என தங்களுக்குத் தெரிந்த திறமைகளைக் கொண்டு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நேஹா நிரூபித்துள்ளார்.

நேஹாவின் அடுத்தகட்ட திட்டங்கள்

தண்ணீர் சேமிப்பு என்பது வறட்சி கால தற்காலிக நடவடிக்கையாக இல்லாமல், மக்களின் வாழ்நாள் பழக்கமாக மாற வேண்டும் என நேஹா விரும்புகிறார்.

இதற்காக, தனது 'வாட்டர் சேவர்' செயலியில் மேலும் சில மேம்பாடுகளைச் செய்ய திட்டமிட்டுள்ளார். வெவ்வேறு பகுதிகளில் உள்ள தண்ணீர் பற்றாக்குறை நிலவரங்களைச் செயலியில் இணைப்பது. பள்ளிகளுக்கு இடையேயான தண்ணீர் சேமிப்புப் போட்டிகளை உருவாக்குவது.

இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரத்தைச் சேமிக்கவும், குப்பைகளை முறையாக மேலாண்மை செய்யவும் புதிய செயலிகளை வடிவமைப்பது.

"ஒவ்வொரு சொட்டு தண்ணீரும் முக்கியமானது" என்ற எளிய தாரக மந்திரத்துடன் நேஹா தொடங்கிய இந்த முயற்சி, இன்று சர்வதேச அளவில் இளைஞர்களால் வழிநடத்தப்படும் ஒரு பெரும் புரட்சியாக உருவெடுத்து உலகிற்கு வழிகாட்டி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com