ஆப்பிரிக்காவில் படகு கடலில் கவிழ்ந்து 15 குழந்தைகள் உட்பட 109 அகதிகள் பலி

116க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் .
படகு கடலில் கவிழ்ந்து அகதிகள் பலி
Published on: 
Summary

கிழக்கு ஆபிரிக்க நாடான ஜிபூட்டி(Djibouti)-யிலிருந்து ஏமனுக்கு புலம்பெயர்வோரை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்ததில் 109 பேர் உயிரிழந்தனர்.

சிறந்த எதிர்காலத்தைத் தேடி அகதிகளாக சுமார் 350 பேரை ஏற்றிச் சென்ற படகு, அக்டோபர் 8-9 இரவில் ஜிபூட்டியிலிருந்து ஏமனுக்குப் புறப்பட்டது.

ஜிபூட்டியில் உள்ள ஒபோக் துறைமுக நகருக்கு வடக்கே உள்ள குஹேரேயை நெருங்கியபோது, ​​படகு கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் இதுவரை 109 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்களில் 52 பேர் ஆண்கள், 42 பேர் பெண்கள், மற்றும் 15 பேர் குழந்தைகள் (9 சிறுமிகள் மற்றும் 6 சிறுவர்கள்) அடங்குவர்.

மேலும் 116க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ஐநாவின் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) தெரிவித்துள்ளது.

உயிர்தப்பியவர்கள்

இந்த விபத்தில் 80க்கும் மேற்பட்டோர் உயிர் தப்பியுள்ளனர். அவர்கள் அனைவரும் எத்தியோப்பிய நாட்டவர்கள் என IOM தெரிவித்துள்ளது.

இவர்களில் 64 பேர் ஒபோக்கில் உள்ள அதன் புலம்பெயர்ந்தோர் உதவி மையத்தில் தங்கவைக்கப்பட்டு, தேவையான உதவிகளைப் பெற்று வருகின்றனர்.

காணாமல் போனவர்களை தேடும் மற்றும் மீட்கும் பணிகளை ஜிபூட்டிய அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். படகு மூழ்கியதற்கான சரியான காரணங்கள் இன்னும் தெரியவில்லை.

இதயத்தை நொறுக்கும்

ஜிபூட்டியில் உள்ள IOM அமைப்பின் தலைவர் அலெக்சாண்டர் கோய்சாக், "இது இதயத்தை நொறுக்கும் ஒரு உயிர் இழப்பு.

வளைகுடா நாடுகளைச் சென்றடையும் நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் பயணிக்கும் இந்த வழித்தடத்தின் ஆபத்துகளை இந்தச் சம்பவம் பிரதிபலிக்கிறது" என்று கூறினார்.

IOMஇன் காணாமல் போன புலம்பெயர்ந்தோர் திட்டஅறிக்கைபடி , 2025ஆம் ஆண்டில் மட்டும் இந்த வழித்தடத்தில் 900-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தனர் அல்லது காணாமல் போயுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com