போலீஸ் நிலையத்தில் தீக்குளித்த தொழிலாளி - கலெக்டர் அலுவலகத்தில் மனைவி புகார்

விருதுநகர் அருகே போலீஸ் நிலையத்தில் தொழிலாளி தீக்குளித்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

விருதுநகர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வேண்டுராயபுரத்தைச் சேர்ந்தவர் கந்தையா. இவரது மகன் ஜோதிமுருகன் (வயது47). தொழிலாளியான இவருக்கு சுப்புத்தாய் என்ற மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர்.

கந்தையா தனது சொத்துக்களை ஜோதிமுருகனுக்கு கொடுக்காமல் மகளுக்கு உயில் எழுதினார். இதனால் விரக்தி அடைந்த ஜோதி முருகன் தந்தை கந்தையாவிடம் இதுகுறித்து கேட்டார்.

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கந்தையா மற்றும் சகோதரி குடும்பத்தினர் ஜோதிமுருகனை தாக்கினர்.

இதுகுறித்து அவர் மல்லி போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் புகாரை வாங்க மறுத்துவிட்டனர். இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்று தனது புகாரை மனுவாக கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து மல்லி போலீசார் ஜோதி முருகனின் மனுவை வாங்கி கொண்டனர். ஆனால் வழக்கு பதிவு செய்யவில்லை.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் சரியான விளக்கமும் அளிக்கவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் சம்பவத்தன்று மல்லி போலீஸ் நிலையத்துக்கு வந்தார்.

நடவடிக்கை குறித்து கேட்டபோது, போலீசார் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து போலீஸ் நிலையத்திலேயே ஜோதி முருகன் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். இதற்கு பின் உஷாரான போலீசார் தீயை அணைத்து ஜோதி முருகனை சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் கணவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சுப்புத்தாய் தனது குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலக அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தார்.

போலீஸ் நிலையத்தில் தொழிலாளி தீக்குளித்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com