பேரணாம்பட்டு அருகே உரத் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு

பேரணாம்பட்டு அருகே உரத் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தொழிலாளி சாவு
வெடித்து சிதறிய பாய்லர் மூடி.
வெடித்து சிதறிய பாய்லர் மூடி.
Published on

பேரணாம்பட்டு:

பேரணாம்பட்டு அடுத்த மத்தூர் கிராமத்தில் தோல் உரம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.

ஆம்பூரை சேர்ந்த கலிபத்துல்லா என்பவர் நடத்தி வருகிறார். இங்கு 13 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் 5 பேர் கொல்கத்தாவை சேர்ந்தவர்கள் இந்த ஆலையில் தோல் வேகவைப்பதற்காக 15 அடி உயரமுள்ள 4 பாய்லர்கள் உள்ளன. அதிலிருந்து நீராவி மூலம் தோல் வேகவைக்கப்பட்டு உரம் தயாரிக்கப்படுகிறது.

ஆலையில் கொல்கத்தா அருகே உள்ள காகிப்பூரை சேர்ந்த சுகுமார் (வயது 45) என்ற தொழிலாளி பாய்லர் அருகே பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் எந்தவித பாதுகாப்பு உபகரணமும் அணியவில்லை. இந்த நிலையில் நேற்று மாலை திடீரென நீராவி பாய்லரின் மூடியில் விரிசல் ஏற்பட்டு வெடித்து சிதறியது.

இதனால் அதிர்ச்சியடைந்த சுகுமார் உயிர்தப்புவதற்காக மேலே இருந்து கீழே எகிறி குதித்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. நீராவி பட்டதில் உடல் வெந்தது. படுகாயம் அடைந்த சுகுமார் மீட்கப்பட்டு பேரணாம்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை 11 மணியளவில் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சுகுமாருக்கு பூடி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.  #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com