கடன் தொல்லை: வி‌ஷம் குடித்து கலெக்டர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண்

திருத்துறைப்பூண்டி அருகே கடன் தொல்லையால் வீட்டில் விஷம் குடித்து விட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பெண் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Published on

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ராயநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சங்கீதா (வயது 40). இவர் திருத்துறைப்பூண்டியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.1 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இந்த பணத்திற்கான தவனை தொகையை கடந்த சில மாதங்களாக கட்டவில்லை. இதனால் கடன் தவணை தொகையை உடனே கட்ட வேண்டும் என நிதி நிறுவனம் வற்புறுத்தியுள்ளது.

கடன் தொல்லையால் மனவேதனையடைந்த சங்கீதா நேற்று திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க முடிவு எடுத்துள்ளார். அதன்படி வீட்டில் இருந்து புறப்படும் போது சங்கீதா வி‌ஷம் குடித்துள்ளார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்துள்ளார். அங்கு நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்த காத்திருந்த போது திடீரென அவர் மயங்கி கிழே விழுந்தார். இதனை பார்த்து அருகில் இருந்த அரசு பெண் ஊழியர்கள் ஓடி வந்து அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சங்கீதா சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் வி‌ஷம் குடித்து விட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பெண் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com