

பாகிஸ்தானில் வருகிற 25-ம் தேதி (புதன் கிழமை) அன்று பஞ்சாப் உள்ளிட்ட மாகாணங்களுக்கான தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லீம் கட்சி, தெஹ்ரீக் இ இன்சாப் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய 3 முதன்மை கட்சிகள் போட்டியிடுகின்றன.
இதில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கும், இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக் இ இன்சாப் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. பாகிஸ்தானில் மொத்தம் 342 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.
இவற்றுள் 272 தொகுதிகளில் பொது வேட்பாளர்களுக்கான வாக்கெடுப்பும், மீதமுள்ள தொகுதிகளில் 10 தொகுதிகள் சிறுபான்மையினருக்கும், 60 தொகுதிகள் பெண்களுக்கு எனவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு தகுதி பெற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 10 கோடியே 59 லட்சத்து 55 ஆயிரத்து 407 பேர். இதில் 5 கோடியே 92 லட்சத்து 24 ஆயிரத்து 262 ஆண் வாக்காளர்களும், 4 கோடியே 67 லட்சத்து 31 ஆயிரத்து 145 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.
இந்நிலையில், 272 தொகுதிகளில் 141 தொகுதிகள் அதாவது பாதிக்கும் மேலான தொகுதிகள் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது. பாகிஸ்தான் தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 140 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். குறைந்தது 110 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே கூட்டணி ஆட்சியேனும் அமைக்க முடியும்.
இந்நிலையில், பஞ்சாப் உள்ளிட்ட 4 மாகாணங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், பஞ்சாப் மாகாணத்தில் வெற்றி பெறும் கட்சியே மத்தியிலும் ஆட்சி அமைக்கும் என்ற நிலை இருந்துவருகிறது.