

புதுடெல்லி:
எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் சபாநாயகர் மீரா குமார் இன்று தலைநகர் புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அதன் விவரம்:-
குஜராத் மாநிலத்தின் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து எனது பிரச்சாரத்தை தொடங்க உள்ளேன். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பொதுவான சித்தாந்தத்தின் அடிப்படையில் அமைந்தது.
நான் மக்களவை சபாநாயகராக இருந்த போது, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், நான் வேலை செய்யும் முறையை பாராட்டினர். நான் ஒரு சார்பாக செயல்படுகிறேன் என்று யாரும் குற்றம்சாட்டியதில்லை.
ஜனநாயக மதிப்புகள், வெளிப்படைத் தன்மை, வறுமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு உள்ளிட்ட அரசியல் கோட்பாடுகளை முன் வைத்தே தேர்தலை சந்திக்கிறோம்.
இரண்டு தலித் வேட்பாளர்களுக்கு இடையே ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதாக பார்க்கப்படுகிறது. இந்த அமைப்பு புதைக்கப்பட வேண்டியுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனிடையே, ஜனாதிபதி தேர்தலுக்காக மீராக்குமார் நாளை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.