கணவரை அறையில் அடைத்து சூடு போட்டு சித்ரவதை செய்த மனைவி

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே சொத்தை எழுதி கேட்டு கணவரை அறையில் அடைத்து சூடு போட்டு சித்ரவதை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
மனைவியால் சித்ரவதை செய்யப்பட்ட கணவர் நாராயணசாமி
மனைவியால் சித்ரவதை செய்யப்பட்ட கணவர் நாராயணசாமி
Published on

சென்னிமலை:

ஈரோடு மாவட்டம் சென்னிமலை தெற்கு புது வீதியை சேர்ந்தவர் நாராயணசாமி என்கிற ரமேஷ் (வயது 50).

இவரது மனைவி பெயர் லலிதா (45). மகன் ஸ்ரீநாத் (20). இவர் கல்லூரி படிப்பை முடித்து உள்ளார்.

நாராயணசாமி பெயரில் ரூ.2 கோடிக்கு சொத்து உள்ளது. மேலும் மாத வாடகை பணமும் ரூ.30 ஆயிரம் வருகிறது.

நாராயணசாமியின் மனைவி மற்றும் மகனும் சொத்தை எழுதி கேட்டுள்ளனர். மனைவி லலிதா “உங்களிடம் உள்ள சொத்துகளை இப்போதே எனது பெயரில் மாற்றி எழுதி கொடுங்கள்” என்று கட்டாயப்படுத்தினாராம்.

ஆனால் இதற்கு நாராயணசாமி மறுத்து உள்ளார். “உன் பெயருக்கு இப்போது சொத்தை மாற்ற மாட்டேன். பிறகு பார்க்கலாம்” என்று கூறினாராம்.

இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்கு வாதமும் தகராறும் ஏற்பட்டது. இந்த நிலையில் நாராயணசாமியை அவரது மனைவியும் மகனும் சேர்ந்து வீட்டில் ஒரு அறையில் கடந்த ஒரு வாரமாக வெளியே செல்லவிடாமல் அடைத்து வைத்துள்ளனர். சொத்தை எழுதி கேட்டு உள்ளனர்.

அப்போதும் நாராயணசாமி மறுக்கவே மனைவியும் மகனும் அவரது உடலில் பல இடங்களில் சூடுபோட்டு சித்ரவதை செய்தார்கள்.

நேற்று இரவு 10 மணியளவில் மனைவி சித்ரவதை தாங்காமல் சத்தம் போட்டார். இந்த சத்தத்தை கேட்டு பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் ஈரோடு சூரம்பட்டியில் உள்ள நாராயணசாமியின் உறவினர் கோபால் என்பவருக்கு தகவல் கொடுத்தார். உடனே அவர் சென்னிமலைக்கு விரைந்தார்.

வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நாராயணசாமியை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

அவரது உடலில் சூடு போடப்பட்டிருந்ததால் தீக்காயத்துக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

பிறகு இது குறித்து சென்னிமலை போலீசிலும் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

கணவரை அறையில் அடைத்து சூடு போட்டு சித்ரவதை செய்த மனைவி லலிதா மற்றும் மகன் ஸ்ரீநாத்தையும் போலீசார் கைது செய்தனர்.

பிறகு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் சென்னிமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com