நாமக்கல் அருகே மின்சாரம் தாக்கி வெல்டிங் தொழிலாளி பலி

நாமக்கல் அருகே வெல்டிங் வைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் அருகே மின்சாரம் தாக்கி வெல்டிங் தொழிலாளி பலி
Published on

நாமக்கல்:

நாமக்கல், என்.ஜி.ஓ. காலனியில் வசித்து வருபவர் அறிவழகன். கூலி தொழிலாளி. இவருக்கு தினேஷ்குமார் (வயது 21) உள்பட 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மகளுக்கு திருமணமாகி விட்டது.

தினேஷ்குமார் வெல்டிங் படித்துள்ளார். இவர் நாமக்கல் அருகே உள்ள செருக்கலை பகுதியில் இருக்கும் ஒரு கோழிப்பண்ணையில் வெல்டிங் செய்யும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று தினேஷ்குமார், கோழிப்பண்ணையில் வெல்டிங் வைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அவரை மின்சாரம் தாக்கியது. உடல் முழுவதும் மின்சாரம் பரவியதை தொடர்ந்து தினேஷ்குமார் அங்கிருந்து தூக்கி வீசப்பட்டார்.

பின்னர் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து கோழிப்பண்ணையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மற்ற ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவம் பற்றி நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் அங்கு வந்து தினேஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு தலைமை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆஸ்பத்திரியில் அவரது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பலியான தினேஷ் குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோழிப்பண்ணையில் மின்சாரம் தாக்கி ஊழியர் பலியான சம்பவம் என்.ஜி.ஓ. காலனியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com