சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய மனு தாக்கல் செய்வோம் - தேவசம் போர்டு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், மறு ஆய்வு மனு தாக்கல் செய்வோம் என தேவசம் போர்டு தலைவர் கூறியுள்ளர். #Sabarimala #SabrimalaVerdict
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய மனு தாக்கல் செய்வோம் - தேவசம் போர்டு
Published on

புதுடெல்லி:

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் நுழைய தடை உள்ளது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட பல வழக்குகள் ஒன்றாக்கப்பட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எப் நாரிமன், கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய விசாரித்து வந்தது.

கேரள மாநில அரசு, தேவஸ்தான போர்டு, மத்திய அரசு, மத அமைப்புகள் இந்த வழக்கில் தனித்தனியாக பிரமானப்பத்திரங்கள் தாக்கல் செய்துள்ளன. ஒரு மாநிலத்தின் பாரம்பரியம், மதரீதியான நம்பிக்கைகள் போன்றவற்றோடு அரசமைப்பு சட்டப்படி ஒரு பெண்ணின் உரிமையை தீர்மானிக்கும் இந்த வழக்கு மிகவும் சவாலானதாக கருதப்பட்டது.

தலைமை நீதிபதி தனது தீர்ப்பில், “நீண்டகாலமாக பெண்கள் மீது பாகுபாடு காட்டப்படுகிறது. பக்தி என்பது பாலின பாகுபாட்டுக்கு அப்பாற்பட்டது. பெண்கள் என்பவர் ஆண்களுக்கு சமமானவர்களே. பெண்களை தெய்வமாக வணங்கும் நாட்டில் பெண்கள் பலவீனமானர்கள் அல்ல. இந்த தடை இந்து பெண்களின் உரிமைக்கு எதிரானது” என குறிப்பிட்டார்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி கன்வில்கர் தீர்ப்பில் ஒரே கருத்தை கொண்டிருந்தனர். நீதிபதிகள் சந்திரசூட், நாரிமன் ஆகியோர் சில கருத்துகளில் முரன்பட்டாலும் இறுதி முடிவு ஒன்றாக இருந்த காரணத்தால், தலைமை நீதிபதியின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தனர். நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.

இதனை அடுத்து, அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லலாம் என 4 நீதிபதிகள் ஒரே தீர்ப்பாக வழங்கினர். 

சுப்ரீம் கோர்ட் வழங்கிய இந்த தீர்ப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது. எனினும், அக்டோபர் 16-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்படும். அப்போது, பெண்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

தீர்ப்பு குறித்து சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவஸ்தான போர்டு தலைவர் பத்ம குமார் கருத்து தெரிவிக்கையில், “சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து மறு பரிசீலனை மனு தாக்கல் செய்வோம்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com