

சென்னை:
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய டி.டி.வி தினகரன் தண்டையார் பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
ஆர்.கே நகர் தேர்தலில் எனக்காக பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், ஜெயலலிதா வீடியோ குறித்து விரிவாக பேசமுடியாது. வெற்றிவேல் வீடியோவை வெளியிட்டது எனக்கோ, சசிகலாவுக்கோ தெரியாது.
காலையில் தொலைக்காட்சி பார்த்தே இதனை தெரிந்துகொண்டேன். இதனையடுத்து, அவரை நேரில் அழைத்து விளக்கம் கேட்டபோது, ஜெயலலிதாவை கொன்று விட்டார்கள் என்று துண்டு பிரச்சாரம் செய்ததை பொறுத்துக்கொள்ள முடியாமல் வீடியோவை வெளியிட்டதாக கூறினார்.
தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று வீடியோவை வெளியிட்டிருக்கலாமே என வெற்றிவேலிடம் கூறினேன். வெற்றிவேல் வீடியோவை வெளியிட்டதால் நான் வருத்தமடைந்தேன். அவர் தன்னுடைய சுயநலத்திற்காக வீடியோவை வெளியிடவில்லை.
சம்பந்தப்பட்ட வீடியோ கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் எடுக்கப்பட்டது. ஜெயலலிதா கேட்டுக்கொண்டதன் பேரில் சசிகலாதான் தனது போனில் எடுத்தார். தான் வேட்பாளராக இருந்த காரணத்தால் வீடியோ குறித்து எதுவும் பேசமுடியவில்லை. எங்களிடம் வீடியோ இருப்பது அனைத்து அமைச்சர்களுக்கும் தெரியும்.
வெற்றிவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிருஷ்ண பிரியா உள்ளிட்ட குடும்பத்தினர் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியலையும் தாண்டி அவர் எனக்கு நல்ல நண்பர். தனது செயலுக்காக அவர் வருந்தினார். விளக்கமளித்து விட்டார் எனவே அவர் மீது நடவடிக்கை தேவையில்லை.
ஜெயலலிதா மரண விசாரணை கமிஷன் கேட்டால் வீடியோ ஆதாரங்களை கொடுப்போம் என்று முன்னதாகவே கூறியிருந்தோம். இனி கேட்டால் கொடுப்போம். ஜெயலலிதா நைட்டியில் இருப்பதாலே இந்த விடியோவை வெளியிட வேண்டாம் என்று சசிகலா கூறியிருந்தார்.
ஒரு தமிழராக கனிமொழி, ராசா விடுதலை குறித்து மகிழ்ச்சி தெரிவித்தேன். அதை வேறு எதனுடனும் முடிச்சு போடுவது சரியல்ல. அடுத்தவர் வீழ்வதை எதிர்பார்த்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
வீடியோ ஆதாரம் கேட்டுவிட்டு தற்போது வெளியானதும் கீழ்த்தர அரசியல் என்று மு.க ஸ்டாலின் கூறியது ஏற்புடையதல்ல. அதிமுக.வின் முதன்மை எதிரி திமுக தான்.
இவ்வாறு அவர் கூறினார்.