

புதுடெல்லி:
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை ஒன்றில் ரூ.11,700 கோடி அளவுக்கு மோசடி நடந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பி உள்ளது. இது தொடர்பாக மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடிக்கு எதிராக சி.பி.ஐ. அமைப்பிடம் வங்கி நிர்வாகம் சமீபத்தில் புகார் அளித்தது.
இதில் கடந்த ஆண்டு நடந்த சுமார் ரூ.280 கோடி மோசடி தொடர்பாக நிரவ் மோடி, அவரது மனைவி அமி, சகோதரர் நிஷால், வர்த்தக கூட்டாளி மெகுல் சோக்ஷி மற்றும் 2 வங்கி அதிகாரிகள் ஆகியோர் மீது கடந்த மாதம் 31-ம் தேதியே சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு பதியப்படும் முன்னே நிரவ் மோடி குடும்பத்துடன் வெளிநாடு தப்பி சென்றது அம்பலமாகி இருக்கிறது. அதாவது நிரவ் மோடியும், அவரது சகோதரர் நிஷாலும் கடந்த மாதம் 1-ம் தேதி இந்தியாவை விட்டு வெளியேறி உள்ளனர். இதில் நிஷால் பெல்ஜியம் நாட்டு குடிமகன் ஆவார்.
நிரவ் மோடிக்கு சொந்தமான கடைகளில் நேற்றும் இன்றும் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, கடந்த மாதம் 22-ம் தேதி டாவோஸ் நகரில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடியுடன் குழுவாக நிரவ் மோடி புகைப்படம் எடுத்துள்ளார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மல்லையா வழியில் நிரவ் மோடியும் ஓடியுள்ளார் என விமர்சித்துள்ளார். மேலும், மோடியை கட்டிப்பிடித்தால் நாட்டை கொள்ளையடிக்கலாம் எனவும் அவர் காட்டமான கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ராவீஷ் குமார் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நிரவ் மோடி தற்போது வரை அரசு அலுவலர்கள் யாரையும் தொடர்பு கொள்ள வில்லை. அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியாது. டாவோஸ் நகரில் பிரதமர் மோடியை நிரவ் தனிப்பட்ட முறையில் சந்திக்கவில்லை” என்று ராவீஷ் குமார் தெரிவித்துள்ளார். #PNBScam #NiravModi #PNBFraudCase #TamilNews