

அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ் ஆகிய 5 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா. பாதுகாப்பு சபையில், 10 நாடுகள் நிரந்தரம் அல்லாத தற்காலிக உறுப்பினர்களாக இடம்பெறுகின்றன. பிராந்திய அடிப்படையில் 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர் பதவிக்கு தேர்ந்து எடுக்கப்படுகின்றன. இந்த தற்காலிக உறுப்பினர்களின் பதவி காலம் 2 ஆண்டுகள் ஆகும்.
மொத்தம் உள்ள 10 தற்காலிக உறுப்பினர் இடங்களில் 5 இடங்களுக்கு உறுப்பு நாடுகளை தேர்ந்து எடுக்க ஆண்டுதோறும்தேர்தல்நடைபெறும்.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா ஏற்கனவே 7 முறை தற்காலிக உறுப்பினராக இடம்பெற்று உள்ளது. கடைசியாக 2011 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் உறுப்பினராக இருந்தது.
இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளுக்கான 5 தற்காலிக உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் ஆசியா பசிபிக் பிராந்தியத்துக்கான ஒரு இடத்துக்கு இந்தியா போட்டியிடுகிறது.
இந்த ஒரு இடத்துக்கு இந்தியா போட்டியிட ஆசியா- பசிபிக் நாடுகள் குழுவில் உள்ள சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 55 நாடுகளும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு மனதாக ஆதரவு அளித்தன. எனவே இந்தியா தேர்ந்து எடுக்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.
இந்த தேர்தலை வருகிற ஜூன் 17-ந் தேதி நடத்த, 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐக்கிய நாடுகள் சபை முடிவு செய்து இருந்தது. வழக்கமாக இந்த தேர்தல் ஐ.நா. பொதுச்சபை மண்டபத்தில் ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடைபெறும். 193 நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு ஓட்டுப் போட்டு 5 தற்காலிக உறுப்பினர்களையும் தேர்ந்து எடுப்பார்கள்.