

லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கோரக்பூர் தொகுதி எம்.பி.யாக இருந்த யோகி ஆதித்யநாத் முதல்வரானதால், அத்தொகுதி காலியானது. புல்பூர் தொகுதி எம்.பி மரணமடைந்ததை அடுத்து அந்த தொகுதியும் காலியாக இருந்தது. இதேபோல, பீகாரில் உள்ள அராரியா மக்களவை தொகுதியும் காலியாக இருந்தது.
இந்நிலையில், மேற்கண்ட மூன்று மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், வாக்களர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க தனித்து களமிறங்கியுள்ளது. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் என எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளது. இதனால், இந்த தேர்தல் முடிவுகள் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக உள்ளது.
பீகாரை பொறுத்த வரை லல்லு பிரசாத் யாதவ், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க. உடன் கைகோர்த்த பின்னர் நிதிஷ்குமார் எதிர்கொள்ளும் முதல் தேர்தல் ஆகும். எனவே, இந்த தேர்தலும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த இடைத்தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு நடக்க உள்ள மக்களவை பொதுத்தேர்தலிலும் எதிர்க்கட்சிகளின் பலத்தை பரிசோதிக்கும் தேர்தலாக இருக்கும்.
இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 14-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கபட உள்ளன. #Gorakhpur #LokSabhaByElection #TamilNews