

லண்டன்:
உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர்.அஸ்வின். சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான அணியில் இடம் பெற்ற அவர் இதுவரை நடந்த 2 ஆட்டத்திலும் இடம் பெறவில்லை.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்திலும், இலங்கை அணிக்கு எதிரான 2-வது ஆட்டத்திலும் அஸ்வின் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறவில்லை. இந்தியாவின் வெற்றிகரமான பவுலரான அவர் நீக்கப்பட்டது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்திலாவது அவருக்கு கேப்டன் வீராட் கோலி வாய்ப்பு வழங்குவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணியில் (15 பேர் கொண்ட அணி) அஸ்வின் இடம் பெறுவதை வீராட் கோலி விரும்பியது இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தேர்வு குழு உறுப்பினர்கள் வட்டாரங்கள் இந்த தகவலை தெரிவித்தன. அஸ்வின் இடத்தில் இடதுகை லெக்ஸ் பின்னர்கள் சஹால், சபாஷ் நதீம் ஆகியோரில் ஒருவர் இடம்பெற வேண்டும் என்று விரும்பியுள்ளார்.
இங்கிலாந்து ஆடுகளங்களில் ஆப்ஸ் பின்னர்களால் தாக்கத்தை ஏற்படுத்த இயலாது என்று கருதி கோலி இந்த விருப்பத்தை தெரிவித்து உள்ளார்.
ஆனால் தேர்வு குழுவினர் அதை நிராகரித்து விட்டனர். ஜடேஜா இடதுகை லெக்ஸ் பின்னர் வரிசையில் இருப்பதால் தேர்வு குழுவினர் அஸ்வினை 15 பேர் கொண்ட அணியில் இடம் பெற வைத்தனர் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தனர்.
தற்போது அணியில் உள்ள வீரர்களில் 10 பேர் பயிற்சியாளர் பதவியில் கும்ப்ளே நீட்டிக்கப்படுவதை விரும்பவில்லை. ஆனால் கும்ப்ளேயின் ஆதரவாளராக அஸ்வின் இருக்கிறார். இதையெல்லாம் அறிந்துதான் கோலி தேர்வு குழுவினரிடம் அஸ்வின் இடம் பெறுவதை விரும்பவில்லை என்று தெரிவித்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தனர்.
இதேபோல ரகானேயும் கும்ப்ளே ஆதரவாளர் ஆவார். அவரும் கடந்த 2 போட்டியில் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறவில்லை. இதேபோல முகமது ஷமியும் இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.