

விழுப்புரம்:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க. தலைமையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் தமிழகம் முழுவதும் தொடர்ந்து சாலை மறியல், ரெயில் மறியல் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இன்று 3-வது நாளாகவும் அவர்களது போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் காந்தி சிலை அருகே மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க. உள்பட அரசியல் கட்சியினர் திரண்டனர்.
அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக விழுப்புரம் ரெயில் நிலையத்துக்கு புறப்பட்டு சென்றனர்.
அந்த நேரத்தில் சென்னையில் இருந்து குரூவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரம் ரெயில் நிலையத்துக்கு வந்தது.
அந்த ரெயில் முன்பு பொன்முடி தலைமையிலான அரசியல் கட்சியினர் மறியல் செய்தனர். பலர் ரெயில் என்ஜின் மீது ஏறி நின்றனர். சிலர் தண்டவாளத்தில் படுத்திருந்து மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். தகவல் அறிந்த விழுப்புரம் போலீசார் விரைந்து வந்து முன்னாள் அமைச்சர் பொன்முடி, ராதாமணி எம்.எல்.ஏ. மற்றும் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த 800 பேரை கைது செய்தனர். #Tamilnews