நாடு கடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கு: லண்டன் கோர்ட்டில் விஜய் மல்லையா ஆஜர்

வங்கிக்கடன் மோசடியில் ஈடுபட்டதால் அவரை நாடு கடத்த வேண்டும் என இந்தியா தொடர்ந்த வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
Published on

லண்டன்:

இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கிய பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, அவற்றை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டு உள்ளார். அவர் மீது இந்தியாவின் பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அவர் தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார்.

அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புமாறு இங்கிலாந்து அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி அவரை ஸ்காட்லாந்து போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரை நாடு கடத்தக்கோரி லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று முதல் வருகிற 14-ந்தேதி வரை தொடர்ந்து நடக்கிறது. தலைமை மாஜிஸ்திரேட்டு எம்மா லூயிஸ் அர்பத்னோட் முன்னிலையில் நடைபெறும் இந்த வழக்கு விசாரணைக்காக விஜய் மல்லையா கோர்ட்டில் இன்று ஆஜரானார்.

தான் இந்தியாவில் இருந்து தப்பி வந்தவன் இல்லை என்றும் 1992-ம் ஆண்டில் இருந்தே லண்டனில்தான் வசிப்பதாகவும் விஜய் மல்லையா நீதிபதிகளிடம் கூறினார்.

சில மணிநேரத்திற்கு பின்னர் வெளியே வந்த விஜய் மல்லையா, “நான் மீண்டும் கூறுகிறேன். என் மீதான குற்றச்சாட்டு பொய்யானது. அடிப்படை ஆதாரமற்றது. வேறு எதுவும் சொல்வதிற்கில்லை” என்று கூறினார்.

இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் இங்கிலாந்து அரசின் வழக்கு சேவை மையம் ஆஜரானது. நாடு கடத்தல் வழக்கில் புகழ்பெற்ற மார்க் சம்மர்ஸ் தலைமையிலான குழுவினர் இந்த வழக்கில் இந்தியா சார்பில் வாதாடினர்.

அதேநேரம் மல்லையா சார்பில் கிளேர் மாண்ட்கோமெரி ஆஜரானார். இவர் கிரிமினல் மற்றும் மோசடி வழக்குகளுக்கு புகழ்பெற்றவர் ஆவார்.

இந்த வழக்கின் தீர்ப்பு அடுத்த ஆண்டு (2018) ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மல்லையாவை நாடு கடத்துவதற்கு ஆதரவாக தீர்ப்பு அளிக்கப்பட்டால், அவரை நாடு கடத்துவதற்கான உத்தரவை இங்கிலாந்து உள்துறை செயலாளர் ஆம்பர் ரட், 2 மாதங்களுக்குள் பிறப்பிக்க வேண்டும்.

எனினும் அதற்கு முன்னதாக இந்த தீர்ப்பை எதிர்த்து வேறு கோர்ட்டுகளில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, விஜய் மல்லையா கோர்ட்டுக்கு வந்த போது அங்கிருந்த தீ எச்சரிக்கை மணி ஒலித்ததால், சிறிது நேரம் விசாரணையில் தாமதம் ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com