தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் தங்கியிருப்பது சரியானது தான்: விஜயதரணி சொல்கிறார்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் புதுவையில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளது சரியானது தான் என்று விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி கூறினார்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் தங்கியிருப்பது சரியானது தான்: விஜயதரணி சொல்கிறார்
Published on

நாகர்கோவில்:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் அணிகள் இணைப்பால் அதிருப்தி அடைந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர், கவர்னரை நேரில் சந்தித்து எடப்பாடிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறி மனு கொடுத்தனர்.

பின்னர் அவர்களில் 18 பேர் புதுவையில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். இன்று 3-வது நாளாக அவர்கள் அங்கு தங்கியிருக்கிறார்கள்.

அ.தி.மு.க. அரசுக்கு எதிராக அவர்களது கட்சி எம்.எல்.ஏ.க்களே போர்க்கொடி தூக்கி உள்ளதால் சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கவர்னரை வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் புதுவையில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளது சரியானது தான் என விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி கூறி உள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு அளித்த ஆதரவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் வாபஸ் பெற்றுள்ளனர். இதனால் அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் கவர்னரை சந்தித்து கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது.

எடப்பாடி அரசு ஊழல் அரசு என்று அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம் தற்போது எடப்பாடியுடன் இணைந்துள்ளார். அவர் இணைந்தபிறகும் மெஜாரிட்டி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எடப்பாடி அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் ஒரு சரியான தலைமை இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகளிடையே பல பிளவுகளும் உள்ளது. ஜெயலலிதா மறைந்தபிறகு 122 எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூர் விடுதியில் தங்கவைக்கப்பட்டனர். மாநில அரசே அவர்களை பாதுகாப்பாக தங்கவைத்திருந்தது. ஆனால் இப்போது அப்படிப்பட்ட சூழ்நிலை இல்லை. 19 எம்.எல்.ஏ.க்களும் மாநில அரசுக்கு எதிராக மாறி உள்ளனர். இதனால் அவர்களுக்கு அச்சுறுத்தலும் உள்ளது. போலீஸ் துறை மாநில அரசின் கையில் உள்ளதால் அந்த எம்.எல்.எ.க்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது.

மத்திய அரசும், மாநில அரசுக்கு சாதகமாக உள்ளது. எனவே பாதுகாப்பு கருதியே அந்த எம்.எல்.ஏ.க்கள் வெளி மாநிலத்தில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இது சரியான முடிவு தான்.

தினகரன் அணியில் உள்ள திவாகரனின் பஸ் உடைக்கப்பட்டு உள்ளது. இது பாதுகாப்பற்ற சூழ்நிலை இருப்பதையே காட்டுகிறது. எனவே தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று தங்களை தற்காத்து கொள்ளவே எம்.எல்.ஏ.க்கள் வெளிமாநிலத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். எடப்பாடி அணியில் இருக்கும் மேலும் பல எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே அவர்களும் தினகரனுக்கு ஆதரவளிக்க வாய்ப்பு உள்ளது.

எடப்பாடி அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். எதிர்ப்பாளர்கள் மீது சஸ்பெண்டு போன்ற நடவடிக்கை எடுத்து அவர்களை தடுக்கக் கூடாது. ஒருவேளை மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் இந்த ஆட்சி கவிழ்ந்தால் உடனே தேர்தல் நடத்த வேண்டும். அப்படி தேர்தல் நடக்கும்போது காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும்.

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளை மக்கள் பிரநிதிகளிடம் கூறி தீர்வு காண முடியாத நிலையில் உள்ளனர். அவர்களால் அதிகாரிகளை சந்தித்து தங்கள் குறைகளை தீர்க்க முடியவில்லை. இதுபோன்ற நிலையில் ஆட்சி கவிழ்ந்தால் மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். எனவே அதனை தவிர்க்க சட்டசபைக்கு உடனே தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயதரணி எம்.எல்.ஏ., தினகரனை சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது தினகரனுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் மீண்டும் அவர் தினகரன் அணி எம்.எல்.ஏ.க்களுக்கு ஆதரவாக தெரிவித்துள்ள கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com