

சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநில சுயாட்சி மாநாடு வருகிற 21-ந்தேதி சென்னை ராயபுரம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிட கழக தலைவர் கி.வீரமணி, மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மாநாட்டில் அண்டை மாநில முதல்-மந்திரிகளும் பங்கேற்கிறார்கள். இதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நேரில் சந்தித்து அழைப்பு கொடுத்து வருகிறார். புதுச்சேரி மாநில முதல்- மந்திரி நாராயணசாமியை சந்தித்து திருமாவளவன் அழைப்பு கொடுத்தார். அவர் மாநாட்டில் பங்கேற்பதாக தெரிவித்துள்ளார்.
அதையடுத்து கர்நாடக முதல்-மந்திரி சித்த ராமையாவை நேற்று பெங்களூர் சென்று திருமாவளவன் சந்தித்தார்.
மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க கொடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டு கலந்து கொள்வதாக கூறியுள்ளார். கேரள முதல்-மந்திரி பிரனாய் விஜயனுக்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன் இ-மெயில் மூலம் அழைப்பிதழ் அனுப்பி அவர் பங்கேற்பதை உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து மதுரை சென்ற திருமாவளவன் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் வருகிற 21-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாடு நடை பெற உள்ளது. இதில் பங்கேற்குமாறு அண்டை மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு, மாநில அரசின் உரிமையை பறிக்கிறது. தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
நான் உள்பட பல்வேறு கட்சித்தலைவர்கள், கவர்னரை சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தினோம். ஆனால் அவர் அ.தி.மு.க.வில் நடப்பது உள்கட்சி பிரச்சினை. எனவே சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.
கவர்னர் தெரிவிக்கும் முன்பே மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் டெல்லியில் இந்த கருத்தை கூறினார். அப்போதே பாரதீய ஜனதா அரசின் நிலைப்பாடு தெரிந்துவிட்டது. ஜனநாயகம் எப்படி செயல்படுகிறது என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
நீலத்திமிங்கல விளையாட்டை விளையாடிய மதுரை மாணவர் தற்கொலை செய்து கொண்டது வருத்தம் அளிக்கிறது. இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து நீலத்திமிங்கல விளையாட்டை தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.