இன்று விடுதலை சிறுத்தைகளின் சுயாட்சி மாநாடு: 2 முதல்-மந்திரிகள், 7 தலைவர்கள் பங்கேற்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநில சுயாட்சி மாநாடு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் 2 முதல் மந்திரிகள், மு.க.ஸ்டாலின், 7 தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
இன்று விடுதலை சிறுத்தைகளின் சுயாட்சி மாநாடு: 2 முதல்-மந்திரிகள், 7 தலைவர்கள் பங்கேற்பு
Published on

சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநில சுயாட்சி மாநாடு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

மத்தியில் உண்மையான கூட்டாட்சியை நிறுவவும், மாநிலங்களில் சுயாட்சி நிர்வாகத்தை உருவாக்கவும் ஜனநாயகத்தை பாதுகாக்கவும் அனைத்து ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. மாநாட்டுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்குகிறார்.

கேரள முதல்-மந்திரி பிரணாய்விஜயன், புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

திராவிடர்கழக தலைவர் கி.வீரமணி முன்னிலை வகிக்கிறார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் கருத்துரை வழங்குகிறார்கள்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவுயாற்றுகிறார்.

விடுதலை சிறுத்தை பொதுச்செயலாளர்கள் சிந்தனை செல்வன், ரவிக்குமார் ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்துகிறார்கள். முடிவில் பொருளாளர் முகமது யூசுப் நன்றி கூறுகிறார்.

மாநில சுயாட்சி மாநாட்டில் திரளாக பங்கேற்க வேண்டும் என்று திருமாவளவன் அழைப்பு விடுத்து இருந்தார்.

அவரது அழைப்பை ஏற்று தமிழகம் முழுவதும் உள்ள விடுதலை சிறுத்தைகள் சென்னையில் குவிந்தனர். பஸ், கார், ரெயில் மூலம் சென்னையில் முகாமிட்டுள்ள அவர்கள் மாலையில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது:-

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிப்பதன் மூலம் மட்டுமின்றி மேலும் அதிகார குவிப்புக்கு மத்திய அரசு அடித்தளம் போடுகிறது. தற்போது மாநில பட்டியலில் உள்ள நதி நீர் உரிமை, விளையாட்டு ஆகிய இரு அதிகாரங்களையும் பொதுப்பட்டியலுக்கு மாற்றுவதற்கு மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

மாநில அரசுகளின் அதிகாரங்கள் பாதிக்கப்படுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானதாகும். நமது அரசியலமைப்பு சட்டத்தில் உறுதி செயயப்பட்ட கூட்டாட்சி தத்துவத்தை குழி தோண்டி புதைப்பதாகும். இதை அனுமதிப்பது ஒரு சர்வாதிகார ஆட்சியை அனுமதிப்பதற்கு சமம்.

அரசியலமைப்பு சட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட கூட்டாட்சிதத்துவத்தை உயர்த்தி பிடிப்பதும், மாநில உரிமைகளை பாது காப்பதன் மூலம் இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதும் இன்று நமது உடனடி கடமைகள் ஆகும். ஜனநாயக சக்திகளை ஓரணியில் திரட்டும் அறை கூவலோடு இந்த மாநாட்டை விடுதலை சிறுத்தைகள் ஒருங்கிணைக்கிறது.

மாநில உரிமைகளை காக்கும் வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த இக்களத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும் அணி திரள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com