வளசரவாக்கத்தில் என்ஜினீயர் வீட்டில் கொள்ளையடித்த 3 பேர் கைது

வளசரவாக்கத்தில் என்ஜினீயர் வீட்டில் கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

போரூர்:

வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் ராதாநகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த மாதம் 28-ந்தேதி அவர் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு இரவு உணவு சாப்பிட வெளியே சென்றார்.

பின்னர் வீடு திரும்பிய போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 131 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பத தெரிந்தது.

இதுகுறித்து தெற்கு இணை கமி‌ஷனர் மகேஸ்வரி உத்தரவின் பேரில் வளசரவாக்கம் உதவி கமி‌ஷனர் மகிமைவீரன், இன்ஸ்பெக்டர் அமுதா ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் கொள்ளை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மற்றும் கொள்ளையர்களின் கைரேகை தடயங்களை வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் இந்த கொள்ளை தொடர்பாக கோவை மாவட்டம் சின்னபாளையம் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம், சென்னை கோவூரைச் சேர்ந்த ஆனந்த் என்கிற சுதா ஆனந்த், நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த சங்கரபாண்டியன் ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள திருவாரூர் நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோயம்பேட்டில் ஆனந்த் நடத்தி வரும் காய்கறி கடையில் அவரது நண்பர் சங்கரபாண்டியன் வேலை செய்து வருகிறார். வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு மதுரை ஜெயிலில் இருந்த போது அறிமுகமான முருகானந்தம், ஜீவானந்தம் ஆகியோர் கடந்த மாதம் சென்னைக்கு வந்துள்ளனர்.

அப்போது தான் 4 பேரும் சேர்ந்து திட்டம் தீட்டி என்ஜினீயர் ஆறுமுகம் வீட்டில் கொள்ளையடித்து சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர்களிடம் இருந்து 65 பவுன் நகை, 4 லட்சம் ரொக்கம் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com