வளசரவாக்கம் பகுதியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

வளசரவாக்கம் பகுதியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

போரூர்:

வளசரவாக்கம் அதன் சுற்று வட்டாரபகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை பிடிக்க உதவி கமிஷனர் மகிமைவீரன் உத்தர விட்டார். இந்த நிலையில் நேற்று மாலை போரூர் அடுத்த காரம்பாக்கம் அருணாச்சலம் நகர் பாரதி சாலையில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், ஏட்டு வெங்கடப்பன் ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் ஆட்டோ ஸ்டாண்டு அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.

அவர்களது பையை சோதனை செய்தனர். அதில் ஏராளமான கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட காரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் கார்த்திக், காமேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா, ரூ 400 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களிடம் செல்போன் மூலம் ஆர்டர் வாங்கி ரூ.100க்கு கஞ்சா பொட்டலங்கள் அவர்களின் இருப்பிடத்திற்கே கொண்டு வந்து சப்ளை செய்ததும் தெரியவந்தது. மேலும் விசாரணை நடக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com