ரஜினி,கமல் அரசியலில் வெற்றிபெற முடியாது- வைத்திலிங்கம் பேச்சு

எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா போல் ரஜினி, கமல் அரசியலில் வெற்றிபெற முடியாது என்று வைத்திலிங்கம் எம்.பி. பேசினார்.
ரஜினி,கமல் அரசியலில் வெற்றிபெற முடியாது- வைத்திலிங்கம் பேச்சு
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட பொருளாளர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். துணைச்செயலாளர்கள் ருக்மணி கிருஷ்ணன், பொன்.முத்துவேல், பகுதிச்செயலாளர்கள் அறிவுடைநம்பி, எஸ்.சரவணன், ஒன்றிய செயலாளர்கள் துரை.வீரணன், கோ.சாமிவேல், சத்தியமூர்த்தி, துரை.செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், தெற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதாவின் பிறந்த நாளில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும், ஏழை-எளிய மக்கள், முதியோர், ஆதரவற்ற குழந்தைகள் அனைவரும் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு ஜெயலலிதாவின் பிறந்தநாளில் கட்சியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் 2 மரக்கன்றுகளையாவது நடவேண்டும். உறுப்பினர் சேர்க்கையில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஒற்றுமையுடன் ஈடுபடவேண்டும். பழைய உறுப்பினர்கள் புதுப்பித்துக்கொள்ளவேண்டும்.

ஜனநாயக நாட்டில் யாரும் கட்சி ஆரம்பிக்கலாம். மக்கள் ஏற்றுக்கொள்வதை பொறுத்து தான் அவர்களுடைய அரசியல் பயணம் இருக்கும். இன்றைக்கு காவிரியில் தண்ணீர் இல்லை. தனிக்கட்சி ஆரம்பிக்கிறேன் என்று கூறும் ரஜினிகாந்த், கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவிடம் பேசி தண்ணீர் திறந்து விடுங்கள் என்று சொன்னாரா? ஏன், வாய் திறக்கவில்லை. கமலஹாசன் பேசினாரா?.

இவர்கள் எல்லாம் அரசியலில் நிற்க முடியாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல் அவர்களுக்கு தைரியம் கிடையாது. அவர்களுடைய ஆற்றல் எல்லோருக்கும் வராது.

இவ்வாறு ஆர்.வைத்திலிங்கம் பேசினார்.

கூட்டத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, கு.பரசுராமன் எம்.பி., எம்.எல்.ஏக்கள் சி.வி.சேகர், கோவிந்தராஜன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், மாநில கயிறுவாரிய தலைவர் நீலகண்டன், மாணவர் அணிச்செயலாளர் ஆர்.காந்தி, மகளிர் அணி செயலாளர் அமுதா ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் ஜே.வி.கோபால் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது, கட்சியில் 2 கோடிக்கும் அதிகமாக உறுப்பினர்களை சேர்ப்பது, ஜெயலலிதாவின் பிறந்தநாளில் பெண்களுக்கு மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் செயல்படுத்த அரசாணை வெளியிட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்வது. ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 81 ஏழை-எளிய ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்துவைப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #tamilnews 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com