ஈழத்தமிழின அழிப்புக்கு ஐ.நா. நீதி விசாரணை: கனடா தீர்மானத்துக்கு வைகோ வரவேற்பு

இலங்கையில் தமிழர்கள் மீதான இனப்படுகொலைத் தாக்குதல் குறித்து விசாரணை அமைக்குமாறு கனடா நாடாளுமன்றம், ஐக்கிய நாடுகள் சபைக்குக் கோரிக்கை விடுத்திருப்பது வரவேற்புகுறியது என்று வைகோ தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழின அழிப்புக்கு ஐ.நா. நீதி விசாரணை: கனடா தீர்மானத்துக்கு வைகோ வரவேற்பு
Published on

சென்னை:

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஈழத் தமிழ் இன அழிப்புக்கு ஐ.நா. நீதி விசாரணை செய்ய வேண்டும் எனக்கோரி, கனடா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில், வன்முறையாலும், போராலும் பாதிக்கப்பட்ட இலங்கை வாழ் மக்களுக்கு இரங்கலைத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மதச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்குமாறும், அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்குமாறும் இலங்கை அரசைக் கேட்டுக் கொண்டு இருக்கின்றது.

இலங்கையில் தமிழர்கள் மீதான இனப்படுகொலைத் தாக்குதல், 2009 -ம் ஆண்டில் இறுதிக் கட்டப் போர் குறித்தும் விசாரணை செய்வதற்கு, சுதந்திரமான பன்னாட்டு விசாரணை அமைப்பு ஒன்றை அமைக்குமாறு, கனடா நாடாளுமன்றம், ஐக்கிய நாடுகள் சபைக்குக் கோரிக்கை விடுத்து இருக்கின்றது.

கனடா நாடாளுமன்றம் நிறைவேற்றி இருக்கின்ற இந்தத் தீர்மானம், ஈழத் தமிழர் படுகொலைக்கு உரிய நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது.

கனடா அரசுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பிரச்சினையில் உரிய நீதி கிடைப்பதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com