

கும்பகோணம்:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகே இன்று காலை கும்பகோணம் அருகே தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலை பார்வையிட வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது;
கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. திட்ட எண்ணை குழாய் உடைந்து அப்பகுதி மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் தங்களின் உரிமைக்காக அவர்கள் போராடி வருகின்றனர். ஆனால் அவர்கள் மீது பொய் வழக்குப்போட்டு கைது செய்துள்ளனர்.
ஓ.என்.ஜி.சி. திட்டத்தை மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் மத்தியில் ஆளும் மோடி அரசு வலுக்கட்டாயமாக தலைக்கணமாக செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஓ.என்.ஜி.சி. நிறுவன அதிகாரி ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராட்டம் தூண்டப்படுகிறது. வலைதளங்களில் தவறான தகவல் பரப்பி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமிருடன் கூறுகிறார்.
கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக நான் தான் போராட்டத்தை தூண்டுகிறேன். எனக்கு மக்களின் நலன் தான் முக்கியம். நான் இப்பகுதி மக்களுக்காக போராட தயங்க மாட்டேன். வேண்டுமானால் என்மீது போராட்டத்தை தூண்டுவதாக வழக்கு போடுங்கள். அந்த வழக்கில் நானே வாதாடி கொள்கிறேன்.
உடனடியாக ஓ.என்.ஜி.சி நிறுவனம் பணிகளை நிறுத்திக் கொண்டு இங்கிருந்து வெளியேற வேண்டும். இல்லை எனில் தமிழகத்தை விட்டே ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை விரட்டுவேன். தமிழகத்தை விட்டு வெளியேறா விட்டால் இங்கு வரும் அந்த நிறுவனத்தின் வாகனங்களை அடித்து நொறுக்குவோம்.
மதுக்கடைக்கு எதிராக போராடி வெற்றி பெற்றது போல் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராகவும் அனைத்து தரப்பு மக்களையும், குறிப்பாக இளைஞர்கள், பெண்களை திரட்டி போராடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.