மத்திய-மாநில அரசுகள் தமிழக மீனவர்களுக்கு துரோகம் செய்துவிட்டது: வைகோ

மத்திய-மாநில அரசுகள் தமிழக மீனவர்களுக்கு பெரும் துரோகம் செய்துவிட்டது என தென்காசியில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
Published on

தென்காசியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு தமிழகத்திற்கு தொடர்ந்து பல்வேறு கேடுகளையும், தமிழக மக்களுக்கு துரோகத்தையும் செய்து வருகிறது. இதனை தட்டிகேட்கவும், தடுத்து நிறுத்தவும் முதுகெலும்பு இல்லாத அரசாக தமிழக அரசு உள்ளது. ஒக்கி புயலால் குமரி மாவட்டம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினேன். அங்கு மீனவர்கள் வீடுகளில் அழுகையும், கதறலும் தான் கேட்கிறது. நமது தமிழக மீனவர்கள் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டு மராட்டிய மாநில கடலில் கரை ஏற முயன்றுள்ளார்கள். அவர்களை அங்குள்ளவர்கள் கரை ஏற விடாமல் தடுத்துள்ளார்கள்.


மத்திய அரசு காணாமல் போன மீனவர்களை மீட்க எந்தவிதமான முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அதைவிட கொடுமை காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்வதில் மத்திய-மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

குமரியில் நான் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த போது அவர்கள் என்னிடம் 482 விசைப்படகுகள், 82 நாட்டுப்படகுகள் மற்றும் 2,100 மீனவர்களையும் காணவில்லை என ஆதாரங்களுடன் கூறினார்கள். அவர்களின் நிலை என்ன ஆனது? என்று தெரியவில்லை. இது பற்றி மத்திய-மாநில அரசுகள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

மத்திய-மாநில அரசுகள் தமிழக மீனவர்களுக்கு பெரும் துரோகம் செய்துவிட்டது. மேலும் இந்த பிரச்சனையில் தமிழக அரசு கடமை தவறிவிட்டது. பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக தலா ரூ.30 லட்சம் வழங்க வேண்டும். மேலும் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு ஜிபிஎஸ் கருவிகள் வழங்க வேண்டும்.

ஆர்.கே. நகர் தொகுதியில் வரும் 11-ந்தேதி தி.மு.க. கூட்டணி கட்சிகளின் சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் நான் கலந்து கொண்டு பேசுகிறேன். ஆளுங்கட்சியினர் ஓட்டுக்காக எவ்வளவு பணம் கொடுத்தாலும், தில்லு முல்லுகள் செய்தாலும் மக்கள் தி.மு.க.விற்கு தான் வாக்களிப்பார்கள். தி.மு.க. அமோக வெற்றி பெறும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com