

கேள்வி:- உங்களிடம் கருத்து வேறுபாடு இருக்கிறதா? உங்களை யாரும் கட்டுப்படுத்த பார்க்கிறார்களா?.
பதில்:- அப்படி எல்லாம் இல்லை. என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது. யாருக்கும் கட்டுப்படவும் மாட்டேன்.
கேள்வி:- உங்களுக்கு பாலை பற்றி ஒன்றுமே தெரியாது என்று உங்கள் கட்சியை சார்ந்த வைகைசெல்வன் கூறி இருக்கிறாரே?.
பதில்:- அவர் சீக்கு வந்த பிராய்லர் கோழி. அழுகிப்போன தக்காளி. அது சாப்பிடவும் முடியாது. குழம்புக்கும் ஆகாது. அவரை பற்றி பேசுவது தேவையில்லாதது.
கேள்வி:- ஒரு தாய் வயிற்று பிள்ளையாகிய நீங்கள் இப்படி அவரை பற்றி பேசலாமா?
பதில்:- பாலில் கலப்படம் இருக்கிறது என்று சொல்கிறேன். ஆனால் அவர் பால் முகவர்களுக்கு, தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக பேசுவது சரியா? இவர் ஒரு அ.தி.மு.க. தொண்டரா? ஜெயலலிதாவின் தொண்டரா? தனியார் நிறுவனத்துக்கு அவர் (வைகை செல்வன்) விலை போய்விட்டார்.
கேள்வி:- சினிமா போஸ்டர் ஒட்டியவருக்கு செய்தித்துறை அமைச்சர் பதவி கொடுத்தது சரியல்ல என்றும், திராவிட இயக்கத்தின் மீது சேற்றை பூசுகிறீர்கள் என்றும் உங்களை வைகை செல்வன் கூறி இருக்கிறாரே?
பதில்:- நான் சினிமா போஸ்டர் ஒட்டியவன் அல்ல. அ.தி.மு.க.வின் போஸ்டர் ஒட்டியவன். இவர் தேவையில்லாமல் திராவிட இயக்கத்தை பற்றி ஏன் பேசுகிறார். இவர் நியாயமானவரே கிடையாது. பெண்களிடம் தவறாக நடந்து கொண்டார் என்ற ஒரே காரணத்துக்காக தான் இவரிடம் இருந்து பதவி பறிக்கப்பட்டது. என் தொகுதியில் என்னை பற்றி யாராவது ஒரு வார்த்தை தவறாக சொல்லட்டும் பார்க்கலாம். பால், பால் பவுடரில் கலப்படம் இருப்பதாக கூறியதில் இருந்து எவ்வளவு பிரச்சினையை தினமும் சமாளிக்கிறேன் தெரியுமா? தினமும் எனக்கு மிரட்டல் போன் வருகிறது. வெளிநாட்டில் இருந்து மிரட்டல் வருகிறது. நான் எதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். பயம் என்பது எனக்கு கிடையாது. பயம் அறியாதவன் நான்.
கேள்வி:- கட்சியில் ஏற்கனவே பிளவு ஏற்பட்டுள்ளது. இந்த சமயத்தில் உங்களுக்குள் இப்படி மாறி மாறி குற்றஞ்சாட்டுகிறீர்களே?
பதில்:- நான் எதுவும் சொல்லவில்லை. அவர்தான் முதலில் ஆரம்பித்தார். என்னை பதவியை விட்டு விலக சொல்ல வைகை செல்வன் என்ன தமிழக கவர்னரா? முதல்-அமைச்சரா?
கேள்வி:- ஒரு தலைமை இல்லாததினால் தான் இப்படி ஒரு முரண்பாடு ஏற்படுகிறதா?
பதில்:- இது ஒரு பெரிய கட்சி. அப்படித்தான் இருக்கும். கொஞ்ச நாட்களில் சரியாகிவிடும்.
கேள்வி:- வைகை செல்வன், சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் ஆதரவாளராக இருந்து உங்களை குற்றஞ்சாட்டுகிறாரா?.
பதில்:- அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது. அவர் தொகுதியில் உள்ள அனைத்து சமுதாயத்தையும் இரண்டாக்கினார். அதனால் அவரால் வெற்றி பெற முடியவில்லை. அனைத்து சமுதாயத்திலும் சண்டையை ஏற்படுத்தினால் இவரால் எப்படி ஜெயிக்க முடியும். அதற்கான பதிலை தேர்தலில் மக்கள் காட்டிவிட்டார்கள். என்னை பற்றி என் தொகுதியில் கேட்டுப்பாருங்கள். என்னை எல்லாரும் ஏற்றுக்கொண்டார்கள். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராஜதந்திர நடவடிக்கையின் மூலம் கட்சியை பலப்படுத்தி வருகிறார். கடைசியில் எல்லாம் சுபம் என்று முடியும். உரிமைக்குரல் படம் போல் ஒரு காலம் வரும். அந்த படத்தில் எப்படி ஒரு பாட்டில் ஒன்றுகூடுவார்களோ? அப்படி ஒன்று கூடுவோம்.