

வடமதுரை:
வடமதுரை பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக வீடுகளில் முடங்கியுள்ள மக்கள் கடும் வெயிலால் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இப்பகுதியில் திடீரென்று சூறைக்காற்று வீசியது.
இதனால் வடமதுரை அருகே சிங்காரக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட குரும்பபட்டி கிராமத்தில் சிவன் என்பவரது வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. மேற்கூரையில் இருந்த ஆஸ்பெட்டாஸ் சீட் பறந்தது. இதை பார்த்து சிவன் வீட்டினர் அலறியடித்து ஓடினர். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சிவன் குடும்பத்தினரை சிறுகாயங்கள் இல்லாமல் காப்பாற்றினர்.
சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்ற ஊராட்சி மன்ற தலைவர் விநாயகன் அவர்களை மீட்டு அவர்களுக்கு உணவு மற்றும் துணிமணிகள் கொடுத்து அருகில் உள்ள சத்துணவு மையத்தில் தங்க வைத்தார். இந்த சூறைக்காற்றில் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன.