

லக்னோ:
உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.
தேர்தல் வாக்குறுதியின்படி ரூ.36 ஆயிரம் கோடி அளவுக்கு விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்து அவர் உத்தரவிட்டு இருந்தார்.
பயிர்களுக்காக ரூ.1 லட்சம் வரை கடன் வாங்கி இருந்த சுமார் 86 லட்சம் விவசாயிகள் இதனால் பயன் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அம்மாநிலத்தில் உள்ள 75 மாவட்டங்களில் வங்கி கடன் வாங்கி இருந்த விவசாயிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. முதல் கட்டமாக கடந்த மாதம் 17-ந்தேதி 7 ஆயிரம் விவசாயிகளின் கடன் தொகையான சுமார் ரூ.50 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை ஆதித்யநாத் வழங்கி இருந்தார்.
ஹம்பூர் மாவட்டத்தில் 12,460 விவசாயிகள் உள்ளனர். இதில் முதல் கட்டமாக 5 ஆயிரம் பேருக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மந்திரி மாங்கோரி பங்கேற்று செக்குகளை வழங்கினார்.
ஆனால் இதில் மிகப் பெரிய குளறுபடி காணப்பட்டது. பல விவசாயிகளுக்கு குறைந்த அளவு பணம் அச்சிடப்பட்ட செக் வழங்கப்பட்டது. முனிலால் என்ற விவசாயிக்கு ரூ.50 ஆயிரம் கடன் தள்ளுபடி ஆகி இருந்தது. ஆனால் அவருக்கு வழங்கப்பட்ட செக்கில் ரூ.215 என்றே இருந்தது.
இதேபோல சில விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்களில் ரூ.10, ரூ.20 என்றும் இருந்தது. இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பாபுலால் என்ற விவசாயிக்கு ரூ.50 ஆயிரத்துக்கு பதில் ரூ.28 ஆயிரம் என்று இருந்தது.
இதனால் அந்த விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அந்த மந்திரி கூறும்போது, சான்றிதழில் சிலருக்கு தவறாக அச்சிடப்பட்டு விட்டது. இதில் கவனகுறைவு ஏற்பட்டு உள்ளது. இந்த தவறை சரி செய்வோம். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்றார்.
இந்த குளறுபடி காரணமாக 45 பேருக்கு மட்டுமே விவசாய கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.