வடகொரியா ஏவுகணை விவகாரம்: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை அவசரமாக கூட்ட அமெரிக்கா,ஜப்பான் கோரிக்கை

வடகொரியா சமீபத்தில் நடத்திய ஏவுகணை பரிசோதனையால் கடுப்படைந்துள்ள அமெரிக்கா மற்றும் ஜப்பான், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை அவசரமாக கூட்டி இவ்விவகாரத்தை விவாதிக்க கோரிக்கை விடுத்துள்ளது.
வடகொரியா ஏவுகணை விவகாரம்: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை அவசரமாக கூட்ட அமெரிக்கா,ஜப்பான் கோரிக்கை
Published on

வாஷிங்டன்:

வடகொரியா தொடர்ந்து அணு குண்டு சோதனை, ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. தென்கொரியா, அமெரிக்கா மற்றும் ஐ.நா.சபை கடும் எச்சரிக்கை மற்றும் பொருளாதார தடை விதித்தும் கண்டு கொள்ளவில்லை.

இதனால் கொரிய தீப கற்பகத்தில் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தென் கொரியாவில் அதிபர் தேர்தல் நடந்தது. புதிய அதிபராக மூன்ஜெ-இன் பதவி ஏற்றார். தகுந்த நேரம் வரும் போது வட கொரியா சென்று அதன் தலைவர் கிம் ஜாங்-யங்கை சந்திப்பேன் என்று அறிவித்தார். இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான பதட்டம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. அதை பொய்யாக்கும் விபத்தில் வட கொரியா நேற்று காலை 5.27 மணிக்கு வட மேற்கு பியாங்யாங்கில் உள்ள குசாங் பகுதியில் மீண்டும் புதிய ஏவுகணை சோதனை நடத்தியது.

வட கொரியா பரிசோதித்த ஏவுகணை எவ்வளவு தூரம் சென்று இலக்கை தாக்கும் என கணிக்கமுடியாதது என பாதுகாப்பு துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும், சர்வதேச நாடுகளின் கண்டனங்களை காதில் போட்டுக் கொள்ளாமல் வட கொரியா நடத்தியுள்ள இந்த ஏவுகணை பரிசோதனை அமெரிக்காவை ஆத்திரத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது.

இந்நிலையில், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை உடனே கூட்டி இவ்விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன. மேலும், வடகொரியாவின் ஏவுகணை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே,” வடகொரியாவின் செயல் நியாயப்படுத்த முடியாதது. அந்த ஏவுகணையால் சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கும் பாதிப்பு” எனக் கூறியுள்ளார்.

வட கொரியாவின் நடவடிக்கைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்ததையடுத்து, நாளை அல்லது நாளை மறுதினம் பாதுகாப்பு கவுன்சில் கூடி வட கொரிய விவகாரம் குறித்து விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com