

லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று தொடங்குகிறது. மாலைக்குள் முடிவுகள் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் அதற்கான தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, உ.பி.யில் கடந்த 22, 24 மற்றும் 29 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 52.59 சதவீதம் வாக்குகளும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 49.3 சதவீதம் வாக்குகளும், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 53 சதவீதம் வாக்குகளும் பதிவானது.
ஒரு சில இடங்களில் நடைபெற்ற சம்பவங்களை தவிர, உள்ளாட்சி தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், உ.பி.யில் மூன்று கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்குகிறது. இன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வெளியிடும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும்செய்யப்பட்டு உள்ளன என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் பதவியேற்றதற்கு பிறகு நடைபெறும் தேர்தல் என்பதால், உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அவரது ஆட்சிக்கு மக்கள் தங்கள் ஆதரவை அளித்துள்ளார்களா என்பது இன்று மாலைக்குள் தெரிய வரும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.