மாற்றுத்திறனாளிகளின் வங்கிக் கடன் தள்ளுபடி: உ.பி. அரசு அதிரடி

மாற்றுத்திறனாளிகளின் வங்கிக் கடன் தொகையான 3.88 கோடி ரூபாயை தள்ளுபடி செய்ய உத்தரப்பிரதேசம் மாநில அரசு தீர்மானித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் வங்கிக் கடன் தள்ளுபடி: உ.பி. அரசு அதிரடி
Published on

உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில் அமோக வெற்றிபெற்ற பா.ஜ.க. அங்கு ஆட்சி அமைத்துள்ளது. முதல் மந்திரியாக பொறுப்பேற்றுள்ள யோகி ஆதித்யாநாத் அங்கு பல்வேறு மக்கள்நல திட்டங்களை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வருகிறார்.

அதில் ஒருகட்டமாக தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள வங்கிகளில் மாற்றுத் திறனாளிகள் வாங்கிய வங்கிக் கடன் தொகையான 3.88 கோடி ரூபாயை தள்ளுபடி செய்ய அம்மாநில அரசு தீர்மானித்துள்ளது.

மாற்றுத் திறனாளிகள் வாங்கிய கடன் தொகையில் 1.60 கோடி ரூபாய் வரை அவர்கள் திருப்பி செலுத்தியுள்ளனர். நிலுவை தொகையான 3.88 கோடி ரூபாயை இன்னும் 100 நாட்களுக்குள் தள்ளுபடி செய்ய அரசு தீர்மானித்துள்ளது என அம்மாநில மாற்றுத் திறனாளிகள் நலன் மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி ஓம்பிரகாஷ் ராஜ்பர் குறிப்பிட்டுள்ளார்.


மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதிய தொகையை 300 ரூபயில் இருந்து 500 ரூபாயாக இந்த அரசு உயர்த்தியுள்ளது. சுயதொழில் மற்றும் வியாபாரம் செய்யும் மாற்றுத் திறனாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த வங்கிக் கடன் தொகையை 30 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி இருக்கிறோம். இவர்களுக்கான திருமண உதவித் தொகையும் 20 ஆயிரம் ரூபாயில் இருந்து 35 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களை இலவசமாக அளிக்கும் திட்டமும் அரசின் பரிசீலனையில் உள்ளது. இந்த வாகனங்களுடன் காய்கறி, பழங்களை கொண்டு சென்று விற்கும் இணைப்பு மேடையும் இருக்கும். பெண்களுக்கு இலவசமாக தையல் இயந்திரங்கள் வழங்கப்படும்.

மாநிலம் முழுவதும் சுமார் இரண்டு கோடி மாற்றுத்திறனாளிகள் வாழ்ந்து வருவதாக குறிப்பிட்ட அவர் சிறு, குறு தொழில் முனைவோருக்கான பயிற்சி திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளும் இணைக்கப்படுவார்கள். மேலும், மத்திய திறன் மேம்பாட்டு இலக்கு திட்டத்திலும் இவர்கள் இடம் பெறுவார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com