உ.பி.யில் உள்ளாட்சி தேர்தல்: முதல் பலப்பரீட்சையை சந்திக்கும் யோகி ஆதித்யநாத்

உ.பி.யில் உள்ளாட்சி தேர்தல் வெற்றி பெறவேண்டும் என்று பா.ஜனதா தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. யோகி ஆதித்யநாத் முதல்-மந்திரியாகி முதல் பலப்பரீட்சையை இந்த தேர்தல் மூலம் சந்திக்கிறார்.
உ.பி.யில் உள்ளாட்சி தேர்தல்: முதல் பலப்பரீட்சையை சந்திக்கும் யோகி ஆதித்யநாத்
Published on

உத்தரபிரதேசத்தில் கடந்த மார்ச் மாதம் சட்டசபை தேர்தல் முடிந்து யோகி ஆதித்யநாத் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அந்த தேர்தலில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 325 இடங்களில் பா.ஜனதா இமாலய வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

அதற்கு முன்பு 2014 பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 71 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெற்றது.

இப்போது சட்டசபை தேர்தல் முடிந்து 8 மாதம் கடந்துள்ள நிலையில் அங்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. வருகிற 24-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

16 மாநகராட்சி, 198 நகராட்சி, 438 நகர பஞ்சாயத்து ஆகியவை தேர்தலை சந்திக்கின்றன. பாராளுமன்றம் சட்டசபை தேர்தலில் பெற்ற அதே வெற்றியை உள்ளாட்சி தேர்தலிலும் பெறவேண்டும் என்று பா.ஜனதா தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இதற்காக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தேர்தல் பிரசாரம் செய்கிறார். தனது ஆட்சிக்கு மக்கள் ஆதரவு தொடர்ந்து இருக்கிறது என்பதை காட்டவேண்டும் என்று அவர் விரும்புகிறார். எனவே அதற்கான யுக்திகளை அவர் கையாண்டு வருகிறார்.

உள்ளாட்சி தேர்தலுக்காக தனி தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் பல புதிய திட்டங்களையும் அறிவித்துள்ளார். பா.ஜனதாவுக்கு சமாஜ்வாடி கட்சி, காங்கிரஸ் ஆகியவையும் சவாலாக உள்ளன. யோகி ஆதித்யநாத் முதல்-மந்திரியாகி முதல் பலப்பரீட்சையை இந்த தேர்தல் மூலம் சந்திக்கிறார்.

இதில் அதிக வெற்றிகள் குவித்தால் தான் அவருடைய ஆட்சிக்கு மக்களுடைய அங்கீகாரம் இருக்கிறது என்பது அர்த்தமாக அமையும். எனவே பா.ஜனதா கட்சியினர் எல்லா இடங்களிலும் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர்.

2012-ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 16 மாநகராட்சிகளில் 10 இடங்களில் பா.ஜனதா கைப்பற்றியது. ஆனால் நகராட்சி, நகர பஞ்சாயத்து ஆகியவற்றில் பா.ஜனதாவுக்கு அதிக இடங்கள் கிடைக்கவில்லை.

198 நகராட்சிகளில் 42 இடங்களை மட்டுமே பா.ஜனதா கைப்பற்றியது. அதேபோல 438 நகர பஞ்சாயத்தில் 36 இடங்கள் மட்டுமே பாரதிய ஜனதாவுக்கு கிடைத்திருந்தது. அதைவிட கூடுதல் இடங்களை இப்போது கைப்பற்ற வேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com