

பொள்ளாச்சி:
கோவை மாவட்டம், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் உள்ளது கோலார்பட்டி கிராமம். இங்கு உள்ள அரசு மருத்துவமனை சமீபத்தில் பொள்ளாச்சி தாலுக்கா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த மருத்துவமனையில் 30 படுக்கை வசதிகள் உள்ளது. தற்போது, மேலும் 20 படுக்கை வசதிகளுடன் மருத்துவ மனை மேம்படுத்தப்படவுள்ளது.
ஆபரேஷன் தியேட்டர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய மருத்துவமனையில், ஜெனரேட்டர் வசதி இல்லாததால், மின்சார துண்டிப்பு ஏற்படும்போது, மருத்துவமனையில் நோயாளிகள் அவதிப்படும் நிலை இருந்தது.
இதையடுத்து, அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தனது தொகுதி நிதியில் இருந்து ரூ.6 லட்சம் நிதி ஒதுக்கி ஜெனரேட்டர் வாங்கப்பட்டது. அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.
அப்போது அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,
தமிழகத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழங்கி வந்தார். அவருக்கு பிறகு தற்போதுள்ள அரசும் அவர் வழியில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆர்.கே.நகர் தொகுதி ஜெயலலிதா வெற்றிபெற்ற தொகுதி. அந்த தொகுதியில் பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டுள்ளன. குடிசை மாற்று வாரிய வீடுகள் அதிகம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் கோட்டையாக ஆர்.கே.நகர் தொகுதி உள்ளது.
ஆகவே வரும் இடைத்தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. வெற்றிபெறுவது உறுதி என்றார். அ.தி.மு.க. நிர்வாகிகள் சவுந்திரராஜன், ரங்கராஜ், அப்பு, தலைமை மருத்துவர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் இருந்தனர்.