மகாராஷ்டிரா மாநில முதல்-மந்திரியாக பதவியேற்றார் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்-மந்திரியாக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே இன்று மாலை பதவி ஏற்றார்.
முதல் மந்திரியாக பதவியேற்றார் உத்தவ் தாக்கரே
முதல் மந்திரியாக பதவியேற்றார் உத்தவ் தாக்கரே
Published on

மும்பை:

மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பாஜக -சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றும் கருத்து வேறுபாடு காரணமாக ஆட்சி அமைக்க முடியாததால், அந்த மாநிலத்தில் கடந்த 12-ம் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

அதன்பின், அங்கு அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் நிகழ்ந்தன. காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைக்க இருந்த நிலையில், எதிர்பாராத திருப்பமாக கடந்த 23-ம் தேதி அதிகாலை 5.37 மணிக்கு மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி விலக்கி கொள்ளப்பட்டு, தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது. தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாகவும், அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர்.

இதை எதிர்த்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு தேவேந்திர பட்னாவிசுக்கு உத்தரவிட்டது. இதனால் தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில் துணை முதல்-மந்திரி பதவியை விட்டு அஜித்பவார் விலகினார். அவரை தொடர்ந்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி (மராட்டிய வளர்ச்சி முன்னணி) அரசு அமைக்க வழி பிறந்தது.

மும்பையில் நடைபெற்ற 3 கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக தேர்ந்து எடுக்கப்பட்டார். பின்னர் மூன்று கட்சி தலைவர்களும் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். அப்போது தங்களுக்கு 166 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறி அவர்கள் கடிதம் கொடுத்தனர்.

அதை ஏற்று புதிய அரசு அமைக்க உத்தவ் தாக்கரேவுக்கு அழைப்பு விடுத்த கவர்னர், வருகிற டிசம்பர் 3-ந் தேதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அவருக்கு ‘கெடு’ விதித்தார்.

கவர்னர் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து கூட்டணி அரசு அமைப்பதற்கான ஏற்பாடுகளில் 3 கட்சிகளின் தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.

இந்நிலையில், சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசின் பதவி ஏற்பு விழா இன்று மாலை 6.40 மணிக்கு சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயின் சமாதி இருக்கும் மும்பை தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் நடைபெற்றது.

இங்கு நடைபெற்ற விழாவில் புதிய முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்த விழாவில்,தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அவரது மகள் சுப்ரியா சுலே, நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, தி.மு.க. தலைவர் ஸ்டாலின், முன்னாள் முதல் மந்திரி பட்னாவிஸ், அஜித் பவார், பிரபுல் படேல், ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அம்பானி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பதவியேற்பு விழாவை முன்னிட்டு சிவாஜி பார்க் பகுதி போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com