ஹாட்டோ புயல்: சீனா மற்றும் ஹாங்காங்கில் 13 பேர் பலி

ஹாட்டோ புயலின் கடும் சீற்றத்துக்கு சீனா மற்றும் ஹாங்காங்கில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹாட்டோ புயல்: சீனா மற்றும் ஹாங்காங்கில் 13 பேர் பலி
Published on

ஆசியாவின் பொருளாதார மையமாக விளங்கும் ஹாங்காங் நகரை ஹாட்டோ புயல் தாக்கியது. மணிக்கு 155 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கிய இந்த புயலால் கடல் அலைகள் சீற்றத்துடன் நகர வீதிகளுக்குள் பாய்ந்து மோதின.

புயலின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. சாலைகளில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. மக்காவ் நகரில் புயலுக்கு 5 பேரும், ஹாங்காங்கில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

புயலின் தாக்கத்தால் மின்கம்பங்கள் சாய்ந்து நகரமே இருளில் மூழ்கி தத்தளிக்கிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். பல மரங்கள் முறிந்து கட்டிடங்களின்மீது சாய்ந்து
கிடக்கின்றன. ஹாங்காங் விமான நிலையம் மூடப்பட்டு, சுமார் 450 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது.

ஹாட்டோ புயலின் தாக்கம் மக்காவ் நகரையொட்டியுள்ள சீனாவின் தெற்கு பகுதியிலுள்ள குவாங்டாங் மாகாணத்தையும் பதம் பார்த்தது.

மக்காவ் நகரில் புயலில் சிக்கி ஒருவரும், அடுக்குமாடி குடியிருப்பின் 11-வது மாடியில் இருந்து தப்பி விழும்போது ஒருவரும், சாலையில் சென்ற லாரி மோதி ஒருவரும் பலியாகினர். மேலும், குவாங்டாங் நகரில் புயல் பாதிப்பால் 4 பேர் பலியாகினர்.

ஹாட்டோ புயல் தாக்கத்தை தொடர்ந்து, மீட்பு பணிகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மீட்புப்படை அதிகாரிகள் கூறுகையில், இதுவரை தற்காலிக நிவாரண முகாம்களில் 26,817 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 664 ஏக்கர் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளன. மின்சார கம்பங்கள் அடியோடு சாய்ந்ததால் மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com