

நெல்லை:
நெல்லை பேட்டையில் உள்ள பாண்டியாபுரத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் அந்த பகுதியில் உள்ள லேத் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சுதாகர் (வயது10). இவன் பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.
சீனிவாசனின் வீட்டருகே கட்டிட தொழிலாளியான இசக்கி முத்து என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது மகன் பேச்சிமுத்து (9). இவன் பேட்டையில் உள்ள மற்றொரு தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். பக்கத்து பக்கத்து வீடு என்பதால் சிறுவர்கள் சுதாகரும், பேச்சிமுத்துவும் தினமும் சேர்ந்து விளையாடி வந்தனர். விடுமுறை தினமான நேற்று இருவரும் சேர்ந்து விளையாடினர். அவர்கள் பிற்பகல் 3 மணி வரை மதிய உணவு சாப்பிட வீட்டுக்கு வரவில்லை.
இதனால் இருவரையும் அவர்களது பெற்றோர் தேடினர். ஆனால் அவர்கள் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இரவு ஆன பின்பும் வீட்டுக்கு வராததால் 2 மாணவர்களின் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர். தங்களது மகன்கள் காணாமல் போனது குறித்து பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசாரும் சிறுவர்களை தேட தொடங்கினர்.
இந்த நிலையில் பேட்டை மலையாளமேடு அருகே உள்ள சின்ன தாமரை குளத்தில் 2 சிறுவர்கள் தண்ணீரில் பிணமாக மிதப்பதாக போலீசாருக்கு இன்று காலை தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்துக்கு நெல்லை உதவி கமிஷனர் மாரிமுத்து, பேட்டை போலீஸ் இன்ஸ் பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.
பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பிணமாக கிடந்தவர்களை மீட்டனர். அப்போது அவர்கள் 2 பேரும், நேற்று காணாமல் போன மாணவர்கள் சுதாகர், பேச்சிமுத்து என்பது தெரியவந்தது. இதுகுறித்து சிறுவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அங்கு பிணமாக கிடந்த மாணவர்கள் சுதாகர், பேச்சிமுத்து ஆகியோரின் உடல்களை பார்த்து கதறி துடித்தனர். மாணவர்களின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுவர்கள் பலியான சின்ன தாமரைகுளத்தில் தற்போது தண்ணீர் இல்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த சில விவசாயிகள் குளத்தின் ஒரு பகுதியில் சுமார் 25 அடி ஆழத்துக்கு கிணறு போல் தோண்டி அதில் இருந்து தண்ணீர் எடுத்து விவசாயத்துக்கு பயன்படுத்தி வந்தனர்.
நேற்று அந்த பகுதிக்கு சென்ற சிறுவர்கள் சுதாகர், பேச்சிமுத்து ஆகிய இருவரும் தண்ணீரை பார்த்ததும் உள்ளே இறங்க முயன்ற போது ஒருவர் பின் ஒருவராக வழுக்கி விழுந்து நீரில் மூழ்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியான சம்பவம் பேட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.