ஆர்.கே. நகர் தேர்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்துவோம்: தினகரன் பேட்டி

ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிட்டு நான் வெற்றி பெறுவது உறுதி என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.
ஆர்.கே. நகர் தேர்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்துவோம்: தினகரன் பேட்டி
Published on

கோவை பீளமேட்டில் அ.தி.மு.க அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓ.பி.எஸ் கேவியட் மனு தாக்கல் செய்து இருப்பது என்பது வழக்கமான நடவடிக்கைதான். நீதிமன்றத்தில் இரட்டை இலை சின்னம் கொடுக்க கூடாது என கேட்போம். இடைத்தேர்தலில் எந்த சின்னம் கொடுத்தாலும் பரவாயில்லை.

இடைத்தேர்தலில் சின்னம் முக்கியமில்லை. வேட்பாளர் யார் என்பதுதான் முக்கியம். ஆர்.கே.நகர் பகுதி மக்கள் தெளிவாக இருக்கின்றனர். இடைத்தேர்தலில் இரட்டை இலையை வீழ்த்தி அதை மீட்க வேண்டியிருக்கின்றது என்பதுதான் வருத்தமாக இருக்கின்றது. சின்னம் என்பது இரண்டாம் பட்சம் தான். சின்னம் இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற காலம் இதுவல்ல.

சிலீப்பர் செல் சட்டமன்றத்தில் வாக்கெடுப்பின் போது வெளியே வருவார்கள். எதிரிகளையும், துரோகிகளையும் இந்த தேர்தலில் வீழ்த்துவோம். இடைத்தேர்தல் அறிவிக்க வேண்டும் என்பதற்காக சாதிக் அலி வழக்கை காட்டி தேர்தல் ஆணையத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தலில் டெபாசிட் கூட வாங்க மாட்டார் என மைத்ரேயன் தெரிவித்துள்ளார். அவர் சொந்த தொகுதியிலேயே ஜெயிக்க முடியாதவர். அவருக்கு பதில் சொல்ல வேண்டிய தில்லை. மைத்ரேயன் தேர்தல் பூத்தில் அமர்ந்து பணியாற்றிய அனுபவம் இருக்கின்றதா? என தெரியவில்லை.

டிசம்பர் 24-ந்தேதி யார் டெபாசிட் இழக்கின்றனர் என்பது தெரியவரும். இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்புகின்றதே இடைத்தேர்தலில் மக்களுக்கு கொடுக்கின்ற முதல் வாக்குறுதி. யாருடனும் கூட்டணி குறித்து இதுவரை பேசவில்லை.

எனது வீட்டிலும் உறவினர்கள் வீடுகளில் சோதனைகளில் எதுவும் வருமான வரித்துறை கைப்பற்ற வில்லை. சில ஆவணங்களை எடுத்து சென்றுள்ளனர்.

இரட்டை இலை என்பது வரமல்ல என்பதை எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் அணிக்கு விரைவில் புரிய வைப்போம். ஆர்.கே.நகர் அ.தி.மு.க.வின் கோட்டை, நிச்சயம் எங்கள் அணி வெற்றி பெறும். ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிட்டு நான் வெற்றி பெறுவது உறுதி. இதில் தொப்பி சின்னம் கேட்பேன். தேர்தல் ஆணையம் எந்த சின்னம் வழங்கினாலும் பெற்றுக் கொண்டு போட்டியிடுவேன்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர போகின்றேன் என சொன்னதற்கே டெல்லிக்கு ஓடுகின்றனர். அவர்கள் டெல்லிக்கு ஓட வேண்டும் என்பதற்காகவே வழக்கு தொடர போவதாக சொன்னேன். இரட்டை இலையை மீட்க வழக்கு தொடரப்படும்.

சென்ற முறை தேர்தல் நிறுத்தியதற்கு காரணம் நான் ஜெயித்து விடுவேன் என்று நினைத்துதான். பணப்பட்டுவாடா என்பது தேர்தல் ஆணையம் முன்னிறுத்திய காரணமே தவிர பணப்பட்டுவாடா உண்மையில்லை.

இரட்டை இலை சின்னம் தீர்ப்பிற்கு சாதிக் அலி தீர்ப்பை மேற்கோள் காட்டுவது தவறு. எங்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பில் நிறைய தவறுகள் உள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஏ மற்றும் பி மனுவில் கட்சியின் பொதுச்செயலாளர் கையெழுத்து போட வேண்டும். இதுதான் சட்ட விதி. அங்கு கட்சியின் பொதுச்செயலாளரே இல்லை. ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும்தான் இருக்கிறார்கள்.

எனவே எடப்பாடி- ஓ.பி.எஸ் அணியினர் ஏ பார்ம், பி பார்ம்-ல் யாரை வைத்து எந்த அடிப்படையில் கையெழுத்து போட போகிறார்கள் என்று தெரியவில்லை. அ.தி.மு.க.வை தொடங்கிய எம்.ஜி.ஆர். கொண்டு வந்த சட்டவிதியை மாற்றி விட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com